என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டிவனம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைக்கு ரூ.268 கோடி- மத்திய அரசு ஒதுக்கீடு
    X

    திண்டிவனம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைக்கு ரூ.268 கோடி- மத்திய அரசு ஒதுக்கீடு

    இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திண்டிவனம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைக்கு ரூ.268 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
    சென்னை:

    திண்டிவனம்- கிருஷ்ணகிரி இடையே திருவண்ணாமலை, செங்கம் வழியாக 182 கி.மீ. தூர சாலையை 4 வழி தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற மத்திய அரசின் தரைவழிப்போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்தது.

    கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந்தேதி இதற்கான பணிகள் தொடங்கியது. மத்திய அரசு இந்த திட்டத்துக்குரூ.612 கோடி நிதி ஒதுக்கியது. சாலை போடும் பணி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு திடீர் என்று கிடப்பில் போடப்பட்டது.

    சாலைகள் ஆங்காங்கே விரிவாக்கம் செய்யப்பட்டும், ஒரு சில இடங்களில் குறுகலாவும், குண்டும் குழியுமாகவும் இருந்த நிலையில் அப்படியே பாதியில் நிற்கிறது. இதனால் வாகனங்கள் தட்டுத்தடுமாறி சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    திண்டிவனம், விழுப்புரம், கீழ்பெண்ணாத்தூர், திருவண்ணாமலைவரை மட்டும் பணிகள் ஓரளவுக்கு முடிந்து வாகனங்கள் சீராக செல்கின்றன. அதன் பிறகு 4 வழிச்சாலைப்பணிகள் நிறைவடையாமல் உள்ளது.

    நிதிப்பற்றாக்குறை மற்றும் சாலை போடுவதற்கு தேவையான மூலப் பொருட்களான மண், கற்கள் போன்றவைகளை குவாரிகளில் இருந்து பெறுவதில் இடையூறு ஏற்பட்டது. மாநில அரசும் மூலப் பொருட்கள் கிடைப்பதற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதனால் திட்டம் பாதியில் கிடப்பில் போடப்பட்டதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டத்துக்கு மத்திய அரசு தற்போது புத்துயிரூட்டி ரூ.268 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 4 வழிச்சாலைப் பணியை விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பாதியில் நிற்கும் சாலைகளையும், சாலைகள் இணைப்பு பணிகளையும் தேசிய நெடுஞ்சாலைதுறை தொடங்கியுள்ளது.

    12 மாதங்களில் குறிப்பிட்ட காலத்தில் திண்டிவனம்-கிருஷ்ணகிரி 4 வழிச்சாலைப் பணி முடிவடைந்து விடும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த 4 வழிச்சாலை திண்டிவனத்தில் தொடங்கி, விழுப்புரம், கீழ்பெண்ணாத்தூர், செஞ்சி, திருவண்ணாமலை. செங்கம், ஊத்தங்கரை வழியாக கிருஷ்ண கிரியுடன் இணைக்கிறது. இந்த 4 வழிச்சாலைப் பணிகள் நிறைவடைந்தால் இந்தப் பாதையில் போக்குவரத்து சீரடைவதுடன் பயண நேரமும் குறையும்.

    பெங்களூர்- புதுச்சேரி இடையே துரித சாலை போக்குவரத்து மேம்படும்.

    இதே போல் விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழிச் சாலையும், திருச்சி, சிதம்பரம் 4 வழிச்சாலைப் பணியும் ரூ.7600 கோடியில் நிறைவேற்றப்படுகிறது.

    தொழில் வளர்ச்சிக்கு தேவையான துரித சரக்கு போக்குவரத்தை துரிதப்படுத்தும் மத்திய அரசின் ‘பாரத்மாலா பிரயோஜனா’ திட்டத்தின் கீழ் இந்த 4 வழிச் சாலைப் பணி விரைவில் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
    Next Story
    ×