search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிதர் முகமது
    X
    கிதர் முகமது

    வியாபாரிகள் போல நடித்து கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஏஜெண்டுகள் - விசாரணையில் தகவல்

    கோவையில் ரூ.60 லட்சம் கள்ளநோட்டுகள் அச்சடித்த கும்பலில் ஒருவரான கிதர் முகமதுவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வியாபாரிகள் போல நடித்து கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக தெரிவித்துள்ளார். #FakeCurrency
    கோவை:

    கோவையில் பிடிபட்ட கள்ளநோட்டு கும்பலின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சாய்பாபா காலனியை சேர்ந்த ஆனந்த் (வயது 31), வடவள்ளியை சேர்ந்த கிதர் முகமது(68) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கும்பல் தலைவனான காரமடையை சேர்ந்த சுந்தர் (38) எர்ணாகுளத்தில் தலைமறைவாக இருக்கிறார். அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.

    இக்கும்பல் கடந்த 2 மாதங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை அச்சடித்து 4 மாநிலங்களில் புழக்கத்தில் விட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு கள்ளநோட்டுகளை அச்சடித்து கொடுத்ததாக தகவல் வெளியாகியது.

    இதைத்தொடர்ந்து கிதர் முகமதுவிடம் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், கியூ பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினர். கோவை-கேரள எல்லையை ஒட்டிய மலை கிராமங்களில் சுந்தர், கிதர் முகமது ஆகியோர் அதிக நாட்கள் இருந்துள்ளனர். எனவே அங்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளை புழக்கத்தில் விட்டார்களா? என விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த கும்பல் வியாபாரிகள் போல நடித்து கள்ள நோட்டுகளை மோட்டார் சைக்கிள்களில் எளிதாக கடத்தி சென்று புழக்கத்தில் விட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு கும்பல் கள்ள நோட்டுகளை கொடுத்து ஆடுகளை வாங்கிச் சென்ற சம்பவம் அடிக்கடி நடந்தது. இச்சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    கோவையில் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஏஜெண்டுகள் யார்-யார்? என்பது குறித்து கிதர் முகமதுவிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கிடைத்த தகவல்களை வைத்து ஒரு பட்டியல் தயாரித்து விசாரணை நடத்தப்பட்டது.

    இவர்கள் போலீசில் பிடிபட்ட தகவலறிந்து ஏஜெண்டுகள் செல்போனை ‘சுவிட்ச்-ஆப்’ செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர். அவர்கள் கடைசியாக யார்- யாரிடம் பேசினார்கள்? என பட்டியல் சேகரித்து விசாரணை நடந்து வருகிறது.

    மத்திய அரசு கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. அதன்பிறகு இந்த கும்பல் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் அடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். இதற்காக சுந்தர் குஜராத்தில் இருந்து நவீன வெள்ளை காகிதங்களை வரவழைத்து கள்ளநோட்டுகளை அச்சடித்துள்ளனர்.

    சுந்தர் மீது கோவை போத்தனூர், சரவணம்பட்டி, வெரைட்டிஹால் போலீஸ் நிலையங்கள், சி.பி.சி.ஐ.டி. பிரிவு மட்டுமல்லாது கேரளாவிலும் பல்வேறு வழக்குகள் உள்ளது. இவருக்கு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்கும் கும்பல் மற்றும் ஹவாலா கும்பலுடன் தொடர்பு உள்ளது.

    கோவை பீளமேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள பழைய 1000 ரூபாய் நோட்டு கண்டுகளை நேற்று போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் நாமக்கல்லை சேர்ந்த தஸ்தா கீர்(40) என்பவர் தலைமையில் காரில் வந்த 6 பேர் கும்பல் இந்த நோட்டுகளை மாற்றுவதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது.

    பழைய ரூபாய் நோட்டுகளை தற்போது எங்குமே மாற்ற முடியாது என்ற நிலையிலும் அவர்கள் எதற்காக கொண்டு வந்தார்கள்? என்பது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து கள்ள நோட்டுகளை வாங்கிச் செல்வதற்காக வந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு சாய் பாபா காலனியில் கள்ள நோட்டு கும்பல் பிடிபட்டது தெரியாமல் இந்த கும்பல் பழைய நோட்டுகளை கொண்டு வந்திருக்கலாம் எனவும், கோவை வந்த பிறகு தகவல் கிடைக்கவே அவர்கள் தப்பிச்சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #FakeCurrency
    Next Story
    ×