search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி - ரூ.2 கோடி மதிப்புள்ள பணம்-நகைகள் தப்பியது
    X

    வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி - ரூ.2 கோடி மதிப்புள்ள பணம்-நகைகள் தப்பியது

    அன்னூர் அருகே வங்கியின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க நடைபெற்ற முயற்சியில் அலாரம் ஒலித்ததால் கொள்ளையன் தப்பி ஓடி விட்டான். ரூ.2 கோடி மதிப்புள்ள பணம்-நகைகள் தப்பியது.
    அன்னூர்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கெம்பநாயக்கன் பாளையத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை உள்ளது.

    இங்கு கெம்பநாயக்கன் பாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பணம் டெபாசிட் செய்து வருகிறார்கள். மேலும் நகைகளை அடகு வைத்து கடனும் பெற்றுள்ளனர்.

    இந்த வங்கி கிளை மேலாளராக அரிஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று மாலை வேலை நேரம் முடிந்து வங்கியை பூட்டி சென்றனர்.

    இன்று அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர் அங்கு வந்தான். அவன் வங்கிக்கு வெளியே இருந்த கண்காணிப்பு கேமராவை வேறு பக்கம் திருப்பினான். வங்கியில் 2 ‌ஷட்டர் உள்ளது. அதில் ஒரு ‌ஷட்டரில் மட்டும் சென்டர் லாக் உள்ளது. மற்றொரு ‌ஷட்டரில் சென்டர் லாக் இல்லை. அதனை மர்ம நபர் உடைத்தான். அங்கு இருந்த சி.சி.டி.வி. கேமராவையும் உடைத்தான்.

    அந்த சமயத்தில் அலாரம் ஒலித்தது. இந்த சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். இதனை பார்த்த கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். இதனால் லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 2 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் தப்பியது.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் வங்கி பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வங்கி மேலாளர் அரிசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் வங்கிக்கு விரைந்து வந்தார். இது குறித்து போலீசில் புகார் செய்தார். சூலூர் டி.எஸ்.பி ஜெயச்சந்திரன், அன்னூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரண நடத்தினார்கள்.

    மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது வங்கியில் இருந்து சற்று தூரம் ஓடி நின்றது. வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்ற சமயத்தில் அப்பகுதியில் மின்சாரம் இல்லை. ஆனாலும் வங்கியில் இருந்த யூ.பி.எஸ். மூலம் கண்காணிப்பு கேமரா மற்றும் அலாரம் இயங்கி வந்தது. கேமராவில் கொள்ளையன் உருவம் பதிவாகி உள்ளது.

    அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வங்கியில் கொள்ளை அடிக்க வந்தவன் மின்சாரத்தை நிறுத்தி விட்டு வந்தானா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் பற்றி தெரியவந்ததும் வாடிக்கையாளர்கள் வங்கி முன்பு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×