search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு கண்டனம் - குமரி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு
    X

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு கண்டனம் - குமரி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்டத்தில் இன்று 70 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
    நாகர்கோவில்:

    தூத்துக்குடியில் நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் இன்று 70 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சிறு, சிறு பெட்டி கடைகள், டீக்கடைகள் மட்டுமே திறந்திருந்தன. கோட்டார் மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.

    நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் ஏராளமாக உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் இன்று அடைக்கப்பட்டு இருந்தது. வடசேரி, செட்டிக்குளம், கிருஷ்ணன் கோவில், பார்வதிபுரம் பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. அப்டா மார்க்கெட், வடசேரி சந்தையில் கடைகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டன.

    அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. ஒரு சில ஆட்டோக்கள், வேன்கள் மட்டும் ஓடின.

    இதேபோல மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பல இடங்களில் கடைகள் மூடப்பட்டிருந்தன.

    தக்கலை, மேட்டுக்கடை, அழகியமண்டபம் ஆகிய இடங்களில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேக்காமண்டபம், குமாரபுரம் பகுதிகளில் கடைகள் திறந்திருந்தன.

    குளச்சல் பஸ் நிலையம் மற்றும் பஜார் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. இன்று மாலை 3 மணிக்கு குளச்சல் நகர பொதுமக்கள் சார்பில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அமைதி பேரணி நடத்துகிறார்கள்.

    தோவாளையில் பூக்கடைகள் அனைத்தும் திறந்து செயல்பட்டன. கன்னியாகுமரியில் கடைகள் திறந்திருந்தன. ஆனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    குலசேகரம், திருவட்டார், அருமனை பகுதியில் வழக்கம்போல் கடைகள் திறந்திருந்தன.

    Next Story
    ×