என் மலர்
செய்திகள்

பட்டாசு தொடர்பான வழக்குகளை விரைவில் முடிக்கக்கோரி பட்டாசு தொழிற்சாலைகள் நாளை ஸ்டிரைக்
விருதுநகர்:
பட்டாசு வெடிக்க தடை கோரிய வழக்குகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி நாளை (26-ந் தேதி) நாடு முழுவதும் பட்டாசுஆலைகள் வேலை நிறுத்தத்தை தொடங்க உள்ளன.
தீபாவளி மற்றும் பண்டிகை என்றால் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு. மகிழ்ச்சியின் வெளிப்பாடான இந்த பட்டாசு சில மாதங்களாக அதன் உற்பத்தியாளர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காற்று மாசு ஏற்படுத்துவதாக கூறி, டெல்லியில் பட்டாசு வெடிக்க, கடந்த தீபாவளிக்கு முன்பு கோர்ட்டு தடை விதித்தது. இதனால் இந்தியா முழுவதும் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதில் அதிகமான நஷ்டத்தை சந்தித்தது சிவகாசி. இங்கிருந்து தான் பல மாநிலங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் பட்டாசு அனுப்பப்படுகிறது.
டெல்லியில் விதிக்கப்பட்ட தடையில் இருந்து மீள்வதற்குள் நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை கேட்டு, கொல்கத்தாவை சேர்ந்த தத்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்திருப்பது, பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மனு கடந்த 1-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது தள்ளுபடி செய்யப்படும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இது தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய- மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது.
இந்த சூழ்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக அகில இந்திய பட்டாசு சங்கங்களின் கூட்டமைப்பு சம்மேளன நிர்வாகிகள், சிவகாசி டான்பாமா அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் பட்டாசு தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் தீர்ப்பை பொறுத்தே தங்களின் வாழ்வாதாரம் அமையும் என்பதை கருத்தில் கொண்டு, பட்டாசு மற்றும் அதன் சார்பு தொழில் நிறுவனங்களுடன் கலந்து பேசி நாளை (26-ந்தேதி) முதல் பட்டாசு ஆலைகள் கதவடைப்பு போராட்டம் நடத்த தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
இதன்மூலம் நாடு முழுவதும் நாளை முதல் பட்டாசு ஆலைகள் மூடப் படுகின்றன. இதுகுறித்து கூட்டமைப்பின் துணைத் தலைவர்கள் ஆசைத்தம்பி, மாரியப்பன் ஆகியோர் கூறியதாவது:-
டெல்லியில் காற்று மாசு குறைவுக்கு பட்டாசு வெடிப்பது காரணம் அல்ல. அங்கு ஓடும் வாகனங்கள், வீடு மற்றும் கடைகளில் பயன்படுத்தும் தந்தூரி அடுப்புகள், பெரிய தொழிற்சாலைகள் போன்றவை தான் காற்று மாசுக்கு காரணம் என்பது தெரியவந்ததால் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்த நவம்பர் 1-ந்தேதி உச்சநீதிமன்றம் நீக்கியது.
ஆனால் தற்போது நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை கேட்டு மனு செய்யப்பட்டு இருப்பது வேதனையானது. இந்த மனு தள்ளுபடியாகும் என எதிர்பார்த்த நிலையில், விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக முன் பணம் கொடுத்து, பட்டாசு வாங்குபவர்கள் ஆர்டர் கொடுக்க தயங்குகின்றனர். வழக்கமாக தீபாவளி பண்டிகை முடிந்ததும் அடுத்த பண்டிகைக்கான பட்டாசுகளுக்கு விற்பனையாளர்கள் முன் பணத்துடன் ஆர்டர் கொடுப்பார்கள். ஆனால் தற்போது தொடரப்பட்ட வழக்கின் காரணமாக விற்பனையாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
முன்பணம் கொடுத்து பட்டாசு வாங்கி வைத்த பின்னர், பட்டாசு வெடிக்க தடை என தீர்ப்பு வந்தால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்பதால் விற்பனையாளர்கள் முடிவு எடுக்க முடியாமல் உள்ளனர். இதனால் பட்டாசு தொழில் முடங்கி கிடக்கிறது. பட்டாசு விற்பனைக்கு அரசு அனுமதி வழங்குகிறது. கோர்ட்டு தடை விதிக்கிறது. உலகின் எந்த நாட்டிலும் பட்டாசு விற்பனைக்கு தடை இல்லை. இந்தியாவில் பட்டாசு உற்பத்திக்கு சுற்றுப்புற சூழல் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
பட்டாசு உற்பத்தி மற்றும் அதன் சார்பு தொழில்களை நம்பி 8 லட்சம் பேர் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும். நல்ல தீர்ப்பு வந்தால் தொழிலை தொடங்கலாம்.
மாறாக பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை. எனவே அச்சத்தில் வாழும் எங்களின் நிலையை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் பட்டாசு வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






