search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்
    X

    வேலூர் கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் போலீசாரின் கெடுபிடி அதிக அளவில் இருந்தும் ஒரு பெண் மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது.

    சமீபத்தில், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த தீக்குளிப்பு சம்பவம் எதிரொலியாக வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கூட்டத்துக்கு மனு கொடுக்க வந்த ஒவ்வொருவரையும் தீவிர சோதனைச் செய்த பின்னரே போலீசார் உள்ளே அனுமதித்தனர்.

    இந்தநிலையில் பிற்பகல் 2 மணியளவில் ஒரு பெண், கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு வந்தார். அப்போது அவர் பாட்டிலில் தான் கொண்டு வந்த ஒரு லிட்டர் மண்எண்ணெய்யை தன்னுடைய உடலில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்.

    அதைப்பார்த்த பெண் போலீசார் விரைந்து வந்து, அவரை தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணை, அங்குள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்ற பெண் போலீசார், அவரின் தலையில் தண்ணீரை ஊற்றினர். அந்தப் பெண்ணுக்கு போலீசார் மாற்று உடை கொடுத்தனர். ரகசிய அறையில் வைத்து போலீசார், அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்தப் பெண், போலீசாரிடம் கூறியதாவது:-

    எனது பெயர் அனிதா (வயது 24). எனது கணவர் சுதன்குமார். நாங்கள், குடியாத்தம் தாலுகா பிச்சானூர்பேட்டை பகுதியில் வசித்து வருகிறோம். எனது கணவர் அரசு சார்ந்த ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் தனியார் நிறுவனத்தில் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். அதில் எனது கணவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.

    அவரிடம் வேலை செய்தவர்களுக்கு, கணவர் தனது சொந்த பணத்தில் ஊதியம் வழங்கினார். இதையடுத்து ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் மின்சாதன பொருட்கள் பழுதாகி விட்டது. அதனை, அவர் தனது சொந்த பணத்தைப் போட்டு செலவு செய்துள்ளார். அதற்கான செலவுத்தொகையை, அந்த நிறுவனத்திடம் தெரிவித்து பணம் கேட்டுள்ளார். ஆனால், அந்த நிறுவனத்தினர் பணம் தராமல் எனது கணவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளனர்.

    இதனால் நாங்கள் இருவரும் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டோம். எனது திருமணத்துக்கு பிறகு இந்தப் பிரச்சனைகள் கணவருக்கு ஏற்பட்டு உள்ளதால், என்னை ராசி இல்லாதவள் போன்று பலர் உருவகப்படுத்தி பேசுகின்றனர். எனவே நான் தற்போது அனாதையாக காணப்படுகிறேன். எனது கணவர் மற்றும் குடும்பம் இன்னல்களுக்கு காரணமான நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து போலீசார், அனிதாவை கலெக்டரிடம் அழைத்துச் சென்றனர். அவர், கலெக்டரிடம் மனு கொடுத்ததும் போலீசார் அனிதாவின் முகத்தை மூடியபடி போலீஸ் வேனில் ஏற்றி சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். கலெக்டர் அலுவலகத்தில் போலீசாரின் கெடுபிடி அதிக அளவில் இருந்தும் ஒரு பெண் மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×