search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 35 பேர் பலி
    X

    கோவை மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 35 பேர் பலி

    கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து 30 பேர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த 4 மாதமாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் நோயாளிகள் கூட்டம் அலைமோதியது.

    இதுதவிர தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெங்கு காய்ச்சல் காரணமாக ஏராளமான பேர் சிகிச்சை பெற்றனர். இந்த நிலையில் டெங்கு ஓரளவு குறைந்த நிலையில் கடந்த 2 வாரமாக மீண்டும் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது.

    கோவை மாவட்டத்தில் கடந்த 4 மாத காலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 35 பேர் பலியானார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    குறிப்பாக கோவை மாநகரில் மட்டும் டெங்குக்கு 9 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சிறுமி யாழினி (7) கடந்த 22-ந் தேதி கடுமையான காய்ச்சல் பாதிப்புடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது ரத்த மாதிரியை சோதனை செய்த போது அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு முற்றிய நிலையில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதே போல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த பரத் என்ற சிறுவனும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார்.

    டெங்கு காய்ச்சலுக்கு 30 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுதவிர ஏராளமான பேர் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளது.

    அவர்களுக்கு டெங்கு இருப்பது உறுதியானால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும் படி சுகாதாரத்துறை சார்பில் கேட்டு கொண்டு உள்ளனர்.

    இது குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி இருப்பிட மருத்துவர் சவுந்திரவேலு கூறியதாவது-

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 30 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான மாத்திரை மற்றும் ரத்த தட்டை அணுக்கள் ஆகியவை போதுமான அளவு இருப்பது உள்ளது.

    சிறுமி யாழினிக்கு ஏற்கனவே காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. அவரது பெற்றோர் சரியாக கவனிக்காததால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடைசி நேரத்தில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்ததால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து உள்ளார்.

    எனவே பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதாரநிலையம், துணை சுகாதார நிலையங்களுக்கு சென்று ரத்த பரிசோதனை செய்து டெங்கு என்று உறுதியானால் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறலாம்.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக மருந்து கடைகளுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவை மாவட்டத்தை தவிர திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானபேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள். இதனால் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    இதில் 5 நாட்களுக்கும் மேல் காய்ச்சல் குறையாமல் உள்ளவர்கள் மற்றும் டெங்கு அறிகுறி உள்ளவர்களுக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


    Next Story
    ×