search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுகந்தி
    X
    சுகந்தி

    கலெக்டர் பெயரில் போலி பணி நியமன ஆணை வழங்கிய பெண் கைது

    சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கி தருவதாக ரூ.3.91 லட்சம் மோசடி செய்து, கலெக்டர் பெயரில் போலி பணி நியமன ஆணை வழங்கிய பெண் கைது செய்யப்பட்டார்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அருகே ஒலகாசி கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவருடைய மகள்கள் கலாராணி, கீதா, தீபா, சுமதி. இவர்களுடைய உறவினர் மோனாலிசா. இவர்கள் சத்துணவு அமைப்பாளர் வேலைக்காக அதே கிராமத்தை சேர்ந்த ராமராஜன் என்பவரது மனைவி சுகந்தி (வயது 20) என்பவர் மூலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சத்துணவு அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் அதிகாரி சசிகலாவுக்கு ரூ.3 லட்சத்து 91 ஆயிரம் கொடுத்ததாக கூறப்பட்டது.

    அதைத்தொடர்ந்து 5 பேருக்கும் கலெக்டர் பெயரில் கையெழுத்திட்ட பணி நியமன ஆணையை சசிகலா வழங்கியதாகவும், அதைக்கொண்டு பணியில் சேர சென்றபோது அது போலி பணிநியமன ஆணை என்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சசிகலா மீது கடந்த மாதம் 19-ந் தேதி நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் சுகந்தி புகார் மனு அளித்தார்.

    இந்த மனுவின் மீது விசாரணை நடத்த போலீசாருக்கு கலெக்டர் ராமன் பரிந்துரை செய்தார். இதனைத்தொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா கடந்த மாதம் 22-ந் தேதி பணம் கொடுத்து பாதிக்கப்பட்ட பெண்களையும், பணம் வாங்கி கொடுத்த சுகந்தியையும் அழைத்து கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சத்துணவு பிரிவிற்கு வந்தனர். அங்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கோதண்டம் மற்றும் சத்துணவு அதிகாரி சசிகலாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கி தருவதாக கூறி, கலெக்டர் பெயரில் போலியாக பணி நியமன ஆணையை தயாரித்து வழங்கிய சுகந்தியை போலீசார் கைது செய்தனர்.

    சுகந்தி மாற்றுத் திறனாளி என்பதால் அடிக்கடி உதவித்தொகை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்வார். இதனை பயன்படுத்தி ஒலகாசி கிராமத்தில் உள்ள அய்யப்பன் மகள்கள் கலாராணி, கீதா, தீபா, சுமதி மற்றும் மோனலிசா ஆகியோரிடம் தனக்கு கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கி தருவதற்கு ஆள் உள்ளது என்று கூறியுள்ளார். அப்போது அவர்களை சுகந்தி கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து தூரத்தில் அமர்ந்திருந்த சசிகலாவை காட்டி அவர் மூலமாகதான் பணம் கொடுத்து வேலை வாங்கி தரப்போகிறேன் என அவர்களிடம் கூறியுள்ளார்.

    அவர்களை சசிகலாவிடம் நேரடியாக சுகந்தி பேச விடவில்லை. சுகந்தியே மற்றொரு செல்போன் எண் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களிடம், பெண் அதிகாரி சசிகலா பேசுவதுபோல் பேசி வேலை வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார். இதனைநம்பி அவர்களும் ரூ.3 லட்சத்து 91 ஆயிரம் பணத்தை சுகந்தியிடம் கொடுத்துள்ளனர். அதன்பின்னர் சுகந்தி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் போலியாக பணி நியமன ஆணை மற்றும் ரசீதை தயார் செய்து அதில் கலெக்டர் மற்றும் சத்துணவு அதிகாரி போல் கையெழுத்திட்டு அதனை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கி உள்ளார்.

    இந்த நிலையில் அந்த பெண்கள் பணியில் சேர சென்றபோது அது போலி பணிநியமன ஆணை என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சுகந்தியிடம் கேட்டபோது இதுதொடர்பாக பணம் கொடுத்த சசிகலாவிடம் கேட்பதாக கூறி உள்ளார். இதையடுத்து மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் சுகந்தியும் சேர்ந்து புகார் மனு கொடுத்து நாடகம் ஆடியது தெரியவந்தது.

    இவ்வாறு போலீசார் கூறினர்.

    மேலும் சத்துவாச்சாரியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் இருந்து போலி பணிநியமன ஆணை தயாரிக்க பயன்படுத்திய கணினியை போலீசார் பறிமுதல் செய்தனர்.



    Next Story
    ×