என் மலர்
செய்திகள்

வண்டலூரில் தடுப்புச்சுவரில் கார் மோதி 2 பேர் பலி
செங்கல்பட்டு:
சென்னை சேத்துப்பட்டில் உள்ள பிரபல இனிப்பு வகைகள் தயாரிக்கும் கடையில் மேலாளராக வேலை பார்த்தவர்கள் சந்தோஷ், ராஜா. இவர்களும் சூப்பர்வைசராக வேலை பார்க்கும் தினேஷ், கார்த்திக் ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் காரில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றனர். காரை ராஜேஷ் என்பவர் ஓட்டினார்.
திருவண்ணாமலை கோவிலில் கிரிவலத்தை முடித்து விட்டு 5 பேரும் சென்னைக்கு திரும்பினர். இன்று அதிகாலை 3 மணி அளவில் கூடுவாஞ்சேரி மேம்பாலத்துக்கு கீழே சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தடுப்புச்சுவரில் மோதியது.
இதில் சந்தோஷ், ராஜா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தினேஷ், கார்த்திக், டிரைவர் ராஜேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் உள்ள கார்த்திக் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து ஓட்டேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.






