என் மலர்tooltip icon

    செய்திகள்

    பு.புளியம்பட்டி அருகே கணவர் கண் எதிரே மனைவி விபத்தில் பலி
    X

    பு.புளியம்பட்டி அருகே கணவர் கண் எதிரே மனைவி விபத்தில் பலி

    பு.புளியம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கணவர் கண் எதிரே மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.
    பு.புளியம்பட்டி:

    அந்தியூர் தவிட்டுப் பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 30). இவரது மனைவி ரம்யா (23). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதமே ஆகிறது.

    சங்கர் கோவையில் லேத் பட்டறை (வொர்க் ஷாப்) வைத்து நடத்தி வருகிறார். நேற்று சங்கர் சொந்த ஊரான அந்தியூர் தவிட்டுப் பாளையம் வந்தார். பிறகு மாலை தன் மனைவி ரம்யாவுடன் கோவைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    பு.புளியம்பட்டி அருகே உள்ள விண்ணப்பள்ளி அரசு மறு வாழ்வு இல்லம் அருகே வந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
    இதில் கணவனும், மனைவியும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    ரம்யாவுக்கு உடல் மற்றும் தலையில் பலத்த அடிபட்டு கணவர் கண் எதிரே பரிதாபமாக இறந்தார்.

    படுகாயத்துடன் துடித்த கணவர் சங்கர் சத்தியமங்கலம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிள் மீது மோதி நிற்காமல் சென்ற வாகனத்தையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு புளியம்பட்டி போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். விபத்தில் பலியான ரம்யா உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பரிசோதனை நடத்தப்பட்டு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.

    திருமணமான 3 மாதத்தில் கணவர் கண் எதிரே மனைவி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×