search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. இரு அணிகள் பேச்சுவார்த்தை சுமூகமாக போய் கொண்டு இருக்கிறது: அமைச்சர் செங்கோட்டையன்
    X

    அ.தி.மு.க. இரு அணிகள் பேச்சுவார்த்தை சுமூகமாக போய் கொண்டு இருக்கிறது: அமைச்சர் செங்கோட்டையன்

    அ.தி.மு.க. இரு அணிகள் பேச்சுவார்த்தை சுமூகமாக போய் கொண்டு இருக்கிறது என்று திருப்பூரில் அ.திமு.க. சார்பில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மே தின பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் தாராபுரம் ரோட்டில் நடந்தது.

    கூட்டத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    திருப்பூர் மாநகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்த அரசு அ.தி.மு.க. அரசு. திருப்பூர் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 4-வது குடிநீர் திட்டத்தை அரசு நிறைவேற்றிக் கொடுக்கும். விரைவு பஸ்களுக்கென்று தனியாக பஸ் நிலையம் விரைவில் அமைக்கப்படும்.

    இளைஞர்களின் நலனுக்காக விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னம் மீட்கப்படும். வருகிற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும். இரட்டை இலை சின்னத்தில் தான் அவர்கள் போட்டியிடுவார்கள். நம்பிக்கையுடன் இருங்கள்.

    அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஸ்மார்ட் கார்டில் மாணவ-மாணவிகளின் புகைப்படம், பெயர், முகவரி, ரத்தவகை, ஜாதி உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறும். மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு நலனுடன் தயாரிக்கப்பட உள்ளது.

    பெற்றோர் தாங்கள் வைத்திருக்கும் செல்போன் மூலமாக தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்களா? எங்கு இருக்கிறார்கள்? உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

    தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 150 நடு நிலைப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர் நிலைப் பள்ளிகள், மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். மற்ற கட்சியினர் தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறார்கள். அண்டை மாநிலங்களில் வேண்டுமானால் அவர்கள் நினைத்தது நடந்திருக்கலாம். ஆனால் தமிழகம் திராவிட மண். இங்கு யாரும் காலூன்ற முடியாது.

    அவினாசி-அத்திக்கடவு திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. வரும் ஆண்டில் ரூ.250 கோடி ஒதுக்கப்பட உள்ளது. மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும் தமிழக அரசு இந்த திட்டத்தை நிறைவேற்றும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ஓ.பன்னீர்செல்வம் கட்சியை வளர்ப்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்டமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் நல்ல முடிவு வரும். பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் ஓர் அணியில் இருக்கிறார்கள். பள்ளி மாணவ-மாணவிகள் 1¾ கோடி பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. இதனுடன் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களும் இணைக்கப்படும்’ என்றார்.

    Next Story
    ×