என் மலர்
விளையாட்டு

உலக கோப்பை செஸ் போட்டி: 4-வது சுற்றில் 4 இந்தியர்கள்- டை பிரேக்கரில் 3 வீரர்கள் இன்று மோதல்
- அர்ஜூன் எரிகைசி, பிரக் ஞானந்தா, பிரணவ், அரிகிருஷ்ணா ஆகிய 4 இந்திய வீரர்கள் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
- டி.குகேஷ், பிரனேஷ், தீப்தி யான் கோஷ் ஆகிய 3 வீரர்களும் 2-வது சுற்றில் தோல்வி.
11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி 8 சுற்றுகளை கொண்டது. நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீரா்கள் பங்கேற்றனர்.
முதல் சுற்றில் 156 பேர் ஆடினார்கள். இதன் முடிவில் 78 வீரர்கள் அடுத்த ரவுண்டுக்கு முன்னேறினார்கள். உலக சாம்பியன் டி.குகேஷ் உள்ளிட்ட 'டாப்-50' வீரர்கள் நேரடியாக 2-வது சுற்றில் இடம்பெற்றனர்.
2-வது சுற்று முடிவில் 74 பேர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்கள். 3-வது சுற்று நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த சுற்றுக்கு 10 இந்திய வீரர்கள் தகுதி பெற்று இருந்தனர்.
3-வது சுற்றின் 2-வது ஆட்டத்தின் முடிவில் அர்ஜூன் எரிகைசி, பிரக் ஞானந்தா, பிரணவ், அரிகிருஷ்ணா ஆகிய 4 இந்திய வீரர்கள் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
அர்ஜூன் எரிகைசி உஸ்பெகிஸ்தான் வீரர் வோசிடாவை முதல் ஆட்டத்தில் 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு வென்றார். 2-வது ஆட்டத்தில் அவர் 'டிரா' செய்தார்.
சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா அர்மேனிய வீரர் ஹோவன்னிசியை எதிர் கொண்டார். முதல் ஆட்டத்தை 'டிரா' செய்த அவர் 2-வது ஆட்டத்தில் வெற்றி பெற்றார். 42-வது நகர்த்த லுக்கு பிறகு இந்த வெற்றி கிடைத்தது.
அரிகிருஷ்ணா பெல்ஜியம் வீரர் டேனியலுடன் முதல் ஆட்டத்தில் வென்று 2-வது ஆட்டத்தில் 'டிரா' செய்தார். இதேபோல பிரணவும், லாத்வியா வீரருடன் முதல் போட்டியில் வென்று 2-வது ஆட்டத்தில் 'டிரா' செய்தார்.
விதித் குஜராத்தி, எஸ்.எல்.நாராயணன், கார்த்திக் வெங்கட்ராமன் ஆகிய 3 வீரர்கள் 2-வது ஆட்டத்திலும் 'டிரா' செய்தனர். இதனால் இன்றைய டை பிரேக்கரில் ஆடுகிறார்கள். இதில் வெற்றி பெற்றால் 4-வது சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.
உலக சாம்பியன் டி.குகேஷ், பிரனேஷ், தீப்தி யான் கோஷ் ஆகிய 3 வீரர்களும் 2-வது சுற்றில் தோற்று வெளியேறினார்கள்.






