என் மலர்
விளையாட்டு

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: கடைசி லீக் போட்டியில் வங்கதேசத்துடன் மோதும் இந்தியா
- நாளையுடன் ‘லீக்’ ஆட்டம் முடிகிறது.
- 11 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் (50 ஓவர்) 8 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளன. இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகியவை வாய்ப்பை இழந்து வெளியேறின.
இந்தூரில் இன்று நடைபெறும் 26-வது போட்டியில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும். நாளையுடன் 'லீக்' ஆட்டம் முடிகிறது. நாளை 2 போட்டிகள் நடக்கிறது. காலை 11 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து (விசாகப்பட்டினம்) அணிகளும், மாலை 3 மணிக்கு தொடங்கும் 2-வது போட்டியில் இந்தியா-வங்காளதேசம் அணிகளும் (மும்பை) மோதுகின்றன.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் 2 ஆட்டங்களில் இலங்கை (59 ரன்), பாகிஸ்தானை (88 ரன்) வீழ்த்தியது. அதன்பிறகு தொடர்ச்சியாக தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா (3 விக்கெட்), இங்கிலாந்து (4 ரன்), அணிகளிடம் தோற்றது. 6-வது போட்டியில் நியூசிலாந்தை 53 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
நாளைய ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்திய மகளிர் அணி உள்ளது.






