என் மலர்
விளையாட்டு

20 ஓவர் உலக கோப்பை அணியில் இஷான் கிஷன் தேர்வு சரியான முடிவே- கவாஸ்கர்
- தற்போது உள்ளூர் போட்டியில் தனது செயல் திறனை வெளிப்படுத்தி உள்ளார்.
- இந்தியாவுக்காக டி.ஆர்.எஸ். முடிவை எடுப்பதில் டோனிக்கு பிறகு ஜிதேஷ்தான் சிறந்த விக்கெட் கீப்பராக இருந்தார்.
10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.
இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டெஸ்ட், ஒரு நாள் போட்டியில் கேப்டனாக இருக்கும் சுப்மன்கில் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
20 ஓவர் அணியில் துணை கேப்டனாக இருக்கும் அவர் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் தேர்வுக் குழு துணிச்சலான முடிவு எடுத்து அவரை நீக்கி உள்ளது. உள்ளூர் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டார். இதேப் போல ரிங்குசிங்குக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் தேர்வில் எந்த தவறும் இல்லை என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இஷான்கிஷன் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒருவர் சிறப்பாக செயல்படுவதை பார்த்தால் அவரை தேர்ந்து எடுக்க வேண்டும். இஷான் கிஷன் ஏற்கனவே அணியில் தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை நிரூபித்து உள்ளார்.
தற்போது உள்ளூர் போட்டியில் தனது செயல் திறனை வெளிப்படுத்தி உள்ளார். அவருக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 2 ஆண்டுகளாக அணிக்கு வெளியே இருந்தார். சையத் முஸ்தாக் அலி கோப்பையை ஜார்க்கண்ட் அணி கைப்பற்ற இஷான் கிஷன் முக்கிய பங்கு வகித்தார்.
ஜிதேஷ்சர்மா அணியில் இருந்து நீக்கப்படுவதற்கு அவர் எந்த தவறும் செய்யவில்லை. இந்தியாவுக்காக டி.ஆர்.எஸ். முடிவை எடுப்பதில் டோனிக்கு பிறகு ஜிதேஷ்தான் சிறந்த விக்கெட் கீப்பராக இருந்தார். அவருக்காக நான் வருத்தப்படுகிறேன். இளம் வீரரான அவர் மீண்டும் உள்ளூர் போட்டியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.






