என் மலர்tooltip icon

    விளையாட்டு

    போட்டியில் இருந்து பாதியில் வெளியேறிய விவகாரம்: செனகல், மொராக்கோ கால்பந்து சங்கத்துக்கு அபராதம்
    X

    போட்டியில் இருந்து பாதியில் வெளியேறிய விவகாரம்: செனகல், மொராக்கோ கால்பந்து சங்கத்துக்கு அபராதம்

    • செனகல் கால்பந்து சங்கத்துக்கு ரூ.5½ கோடியும், மொராக்கோ கால்பந்து சங்கத்துக்கு சுமார் ரூ.3 கோடியும் அபராதமாக விதித்துள்ளது.
    • செனகல் தலைமை பயிற்சியாளர் பாப் தியாவுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

    கேப்டவுன்:

    நேஷன்ஸ் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கடந்த 18-ந்தேதி இரவு மொராக்கோவின் ரபாத் நகரில் நடந்தது. இதில் செனகல் அணி கூடுதல் நேரத்தில் கோல் அடித்து 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

    முன்னதாக கடைசி நிமிடத்தில் மொராக்கோ அணிக்கு பெனால்டி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடுவரிடம் வாக்குவாதம் செய்த செனகல் வீரர்கள் பயிற்சியாளரின் அறிவுறுத்தலின் பேரில் மைதானத்தை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த குழப்பத்தால் 14 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது. சமாதானத்திற்கு பிறகு மீண்டும் களம் திரும்பிய செனகல் வாகை சூடியது. ஆனால் ஆட்டத்தின் பாதியில் நடையை கட்டிய வீரர்களின் செயலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடுமையாக கண்டித்தது.

    இந்த நிலையில் இது குறித்து விசாரித்த ஆப்பிரிக்க கால்பந்து சம்மேளனம், வீரர்களின் மோசமான நடத்தைக்காக செனகல் கால்பந்து சங்கத்துக்கு ரூ.5½ கோடியும், மொராக்கோ கால்பந்து சங்கத்துக்கு சுமார் ரூ.3 கோடியும் அபராதமாக விதித்துள்ளது.

    மேலும் விளையாட்டின் புகழுக்கு களங்கம் விளைவித்ததாக செனகல் தலைமை பயிற்சியாளர் பாப் தியாவுக்கு 5 ஆப்பிரிக்க போட்டிகளில் பணியாற்ற தடையும், ரூ.92 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதே போல் ஒழுங்கீன செயலுக்காக செனகல் வீரர்கள் லிமன் என்டியாயே, இஸ்மைலா சர் ஆகியோருக்கு 2 ஆப்பிரிக்க போட்டிகளிலும், மொராக்கோ கேப்டன் அச்ரப் ஹாகிமிக்கு 2 போட்டிகளிலும், இஸ்மைல் சாய்பரிக்கு 3 போட்டிகளிலும் விளையாட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×