search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    லெஜண்ட் பெற்ற மகனுடன் செல்ஃபி - வைரலாகும் செஸ் புகைப்பட கலைஞரின் நெகிழ்ச்சி பதிவு
    X

    லெஜண்ட் பெற்ற மகனுடன் செல்ஃபி - வைரலாகும் செஸ் புகைப்பட கலைஞரின் நெகிழ்ச்சி பதிவு

    • சென்னையை சேர்ந்த 18 வயதான பிரக்ஞானந்தா தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • செஸ் புகைப்பட கலைஞர் மரியா பிரக்ஞானந்தாவின் தாயாருக்கு சமூக வலைதள பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.

    பாகு:

    அஜர்பைஜான் தலைநகர் பாகு நகரில் நடந்த உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, 'நம்பர் ஒன்' வீரர் மாக்னஸ் கார்ல்செனிடம் (நார்வே) தோல்வியை தழுவினார். இதன் டைபிரேக்கரில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற கார்ல்சென் அடுத்த ஆட்டத்தில் 'டிரா' செய்து உலக் கோப்பையில் மகுடம் சூடினார்.

    தோல்வி அடைந்தாலும் சர்வதேச செஸ் அரங்கில் ஜாம்பவனாக திகழும் கார்ல்செனுக்கு எதிராக பிரக்ஞானந்தா தைரியமாக போராடிய விதம் ரசிகர்களின் இதயங்களை தொட்டது. பாராட்டுகளும் குவிந்தன. விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு இந்த போட்டியில் இறுதி சுற்றை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

    சென்னையை சேர்ந்த 18 வயதான பிரக்ஞானந்தா தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் அவரது தாயார் நாகலட்சுமியும் உடன் சென்றுள்ளார். தந்தை மாற்றுத்திறனாளி என்பதால் பிரக்ஞானந்தாவை போட்டி நடக்கும் எல்லா இடங்களுக்கும் அழைத்து செல்வது அவரது தாயார் தான். அவர் இந்த நிலைக்கு உயர்ந்திருப்பதற்கு நாகலட்சுமியின் பங்களிப்பு அளப்பரியது.

    இந்நிலையில் செஸ் புகைப்பட கலைஞர் மரியா பிரக்ஞானந்தாவின் தாயாருக்கு சமூக வலைதள பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார். அந்த பதிவில் லெஜண்ட் மற்றும் அவரது மகனுடன் செல்பி எடுத்துக் கொண்டேன் என பதிவிட்டுள்ளார்.

    செஸ் விளையாடிய பிரக்ஞானந்தாவை அனைவரும் பாராட்டி வரும் நிலையில் அவரது அம்மாவுக்கு புகழாரம் சூட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×