என் மலர்tooltip icon

    விளையாட்டு

    திடீரென மெஸ்ஸிக்கு பரிசளித்த சச்சின்... பரவசமான ரசிகர்கள்!
    X

    திடீரென மெஸ்ஸிக்கு பரிசளித்த சச்சின்... பரவசமான ரசிகர்கள்!

    • தன்னுடைய 2011 உலகக்கோப்பை ஜெர்சியை கையெழுத்திட்டு மெஸ்ஸிக்கு பரிசாக வழங்கினார்.
    • கால்பந்தில் மெஸ்ஸி நம்பர் 10 ஜெர்சியை அணிந்து விளையாடி வருகிறார்

    கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் மும்பை வான்கடே மைதானத்தில் சந்தித்து உரையாடிக் கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.

    அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். முதலில் கொல்கத்தா சென்ற மெஸ்ஸி, அங்கு தன்னுடைய 70 அடி உயர சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து ரசிகர்களை சால்ட் லேக் மைதானத்தில் சந்தித்துவிட்டு சில நிமிடங்களில் வெளியேறினார். இதன்பின் ஹைதராபாத் வந்த மெஸ்ஸிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அங்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அணியுடன் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் மெஸ்ஸி ஆடினார். அதேபோல் மைதானம் முழுக்க வலம் வந்து ரசிகர்களுக்கு கைகளை காட்டினார். இந்த நிலையில் இன்று மும்பையில் மெஸ்ஸி ரசிகர்களை சந்தித்தார். வான்கடே மைதானத்தில் மெஸ்ஸி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரும் பங்கேற்றனர்.

    அப்போது மெஸ்ஸியும், சச்சின் டெண்டுல்கரும் சந்தித்துக் கொண்டனர். மெஸ்ஸியுடன் சில நிமிடங்கள் உரையாடிய சச்சின் தன்னுடைய 2011 உலகக்கோப்பை ஜெர்சியை கையெழுத்திட்டு மெஸ்ஸிக்கு பரிசாக வழங்கினார். அதனை உற்சாகத்துடன் பெற்றுக் கொண்ட மெஸ்ஸி, சச்சின் டெண்டுல்கருக்கு நன்றி கூறினார். இதன்பின் இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சர்வதேச கிரிக்கெட்டில் நம்பர் 10 ஜெர்சியை சச்சின் டெண்டுல்கர் அணிந்து விளையாடினார். அதேபோல் கால்பந்தில் மெஸ்ஸி நம்பர் 10 ஜெர்சியை அணிந்து விளையாடி வருகிறார்.

    இதனால் ஜெர்சி 10ஐ சச்சின் பரிசாக அளித்தது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×