என் மலர்
விளையாட்டு

வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்? ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதல்
- உள்ளூரில் முதல் ஆட்டத்தில் கால்பதிக்கும் ராஜஸ்தான் வெற்றியை சொந்தமாக்க அதிக ஆர்வம் காட்டும்.
- பெங்களூரு அணி முதல் இரு ஆட்டங்களில் கொல்கத்தா, சென்னையை அடுத்தடுத்து தோற்கடித்தது.
தனது முதல் இரு ஆட்டங்களில் ஐதராபாத், கொல்கத்தாவிடம் தோல்வி கண்ட முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் அணி அடுத்த இரண்டு ஆட்டங்களில் சென்னை, பஞ்சாப்பை பதம் பார்த்தது. முந்தைய ஆட்டத்தில் குஜராத்திடம் பணிந்தது. அந்த ஆட்டத்தில் 218 ரன் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் 159 ரன்னில் அடங்கி 58 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன், ஹெட்மயர், ரியான் பராக், துருவ் ஜூரெல் வலுவூட்டுகின்றனர். நிதிஷ் ராணா, ஜெய்ஸ்வாலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மேலும் பலமடையும். பந்து வீச்சில் ஹசரங்கா, தீக்ஷனா, சந்தீப் ஷர்மா, ஜோப்ரா ஆர்ச்சர் மிரட்டக்கூடியவர்கள். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வீழ்த்தி கலக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இந்த ஆட்டத்திலும் எதிரணிக்கு அச்சுறுத்தலாக விளங்குவார் எனலாம். உள்ளூரில் முதல் ஆட்டத்தில் கால்பதிக்கும் ராஜஸ்தான் வெற்றியை சொந்தமாக்க அதிக ஆர்வம் காட்டும்.
பெங்களூரு அணி முதல் இரு ஆட்டங்களில் கொல்கத்தா, சென்னையை அடுத்தடுத்து தோற்கடித்தது. அடுத்த ஆட்டத்தில் குஜராத்திடம் பணிந்தது. அதற்கு அடுத்தபடியாக மும்பையை வீழ்த்தியது. கடந்த ஆட்டத்தில் சொந்த மண்ணில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடம் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் முதல் 3.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 61 ரன் திரட்டி வியக்கவைத்த அந்த அணி அதன் பிறகு வேகமாக விக்கெட்டை இழந்ததால் 163 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. அதனை 13 பந்துகள் மீதம் வைத்து டெல்லி அணி எட்டிப்பிடித்தது. பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட் கோலி, கேப்டன் ரஜத படிதார், பில் சால்ட் அசத்துகிறார்கள். தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வரும் தேவ்தத் படிக்கல் நல்ல பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் ஹேசில்வுட், குருணல் பாண்ட்யா, யாஷ் தயாள், புவனேஷ்வர் குமார் வலுசேர்க்கின்றனர். இரு அணிகளும் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.






