என் மலர்
விளையாட்டு

Womens Hockey | மகளிா் ஹாக்கி உலகக் கோப்பைக்கு இந்தியா தகுதி
- இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய இறுதிப்போட்டி நேற்று நடந்தது.
- ஆரம்பம் முதலே இங்கிலாந்து மகளிர் அணி அதிரடியாக ஆடியது.
ஐதராபாத்:
16-வது மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் ஆகஸ்டு 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதிச்சுற்று ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் முறையே இங்கிலாந்து, இத்தாலியும், 'பி' பிரிவில் இந்தியா, ஸ்காட்லாந்தும் முதல் இரண்டு இடங்களை பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தன. இந்த போட்டியில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் இரு தகுதிச்சுற்றிலும் (சாண்டியாகோ, ஐதராபாத் சுற்று) 4-வது இடம் பிடிக்கும் அணிகளில் தரவரிசையில் முன்னிலை வகிக்கும் அணியும் நேரடியாக தகுதி பெறும்.
இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடியது.
ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் கிரேஸ் பால்ட்ஸன் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் 1-0 என இங்கிலாந்து முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 43-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் எலிசபெத் நீல் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், இங்கிலாந்து 2-0 என கோல் கணக்கில் வென்று பட்டத்தை வசப்படுத்தியது. தோல்வியைத் தழுவினாலும், உலகக் கோப்பைக்கு இந்திய மகளிா் அணி தகுதி பெற்றது.






