என் மலர்
விளையாட்டு

உலகக் கோப்பை செஸ் 4-வது சுற்றில் பிரக்ஞானந்தா உள்பட 5 இந்திய வீரர்கள் 'டிரா'
- தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, ரஷியாவின் டேனில் துபோவை எதிர்கொண்டார்.
- இந்திய முன்னணி வீரர் அர்ஜூன் எரிகைசி, ஹங்கேரி கிராண்ட்மாஸ்டர் பீட்டர் லெகோவை சந்தித்தார்.
கோவா:
'பிடே' 11-வது உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடந்து வருகிறது. 8 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் 2 ஆட்டங்கள் இடம் பெறும். எதிர்பார்க்கப்பட்ட உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், விதித் குஜராத்தி 3-வது சுற்றுடன் நடையை கட்டினர்.
இந்த நிலையில் போட்டியின் 4-வது சுற்றில் முதல் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் ஒரு ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, ரஷியாவின் டேனில் துபோவை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 'ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை. 41-வது நகர்த்தலில் டிரா கண்டார். இவர்கள் இருவரும் இன்று மீண்டும் மோத உள்ளனர். இதில் வெற்றி பெறும் வீரர் 5-வது சுற்றுக்கு முன்னேறுவார். இதிலும் சமநிலை நீடித்தால் ஆட்டம் டைபிரேக்கருக்கு நகரும்.
மற்றொரு இந்திய முன்னணி வீரர் அர்ஜூன் எரிகைசி, ஹங்கேரி கிராண்ட்மாஸ்டர் பீட்டர் லெகோவை சந்தித்தார். 20-வது நகர்த்தலிலேயே இருவரும் டிராவுக்கு ஒப்புக் கொண்டனர். இதே போல் கார்த்திக் வெங்கட்ராமன், பிரணவ், ஹரிகிருஷ்ணா ஆகிய இந்தியர்களும் தங்களது ஆட்டங்களை டிராவில் முடித்தனர். இன்று 4-வது சுற்றில் 2-வது ஆட்டம் நடைபெறும்.






