என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மகளிர் உலகக் கோப்பை: இறுதிப்போட்டியில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை
    X

    மகளிர் உலகக் கோப்பை: இறுதிப்போட்டியில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை

    • அரையிறுதியில் 4 முறை சாம்பியனான இங்கிலாந்தை விரட்டியடித்து முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.
    • இவ்விரு அணிகளும் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின. இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் கோதாவில் குதிக்கின்றன.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் 3 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் (7 புள்ளி) 4-வது இடம் பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. அரையிறுதியில் 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    அரையிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா நிர்ணயித்த 339 ரன் இலக்கை ஜெமிமா ரோட்ரிக்சின் (127 ரன்) சதம், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் (89 ரன்) அரைசதத்தின் உதவியுடன் இந்திய அணி 9 பந்துகள் மீதம் வைத்து எட்டிப்பிடித்து வியக்க வைத்தது. அத்துடன் பெண்கள் ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிகபட்ச ரன் இலக்கை வெற்றிகரமாக விரட்டிபிடித்த அணி என்ற சாதனையை தன்வசப்படுத்திய கையோடு இந்தியா இந்த ஆட்டத்தில் கால் பதிக்கிறது.

    2005, 2017-ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டியில் தோற்று கோப்பையை கோட்டை விட்ட இந்திய அணி, தங்களது கோப்பை கனவை இந்த முறையாவது நனவாக்கிட வேண்டும் என்று கங்கணம் கட்டி களத்தில் கடுமையாக போராடி வருகிறது. லீக் சுற்றில் தென்ஆப்பிரிக்காவை 5 விக்கெட்டுக்கு 81 ரன் என்ற நெருக்கடிக்குள்ளாக்கி நல்ல நிலையில் இருந்த இந்திய அணி அதன் பிறகு தனது பிடியை நழுவ விட்டதால் தோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் இருந்து பாடம் கற்று இருக்கும் இந்திய அணி பதிலடி கொடுக்க சரியான வியூகத்துடன் ஆயத்தமாகிறது. அத்துடன் உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவும் இந்திய அணிக்கு ஊக்கம் அளிக்கும்.

    இந்திய அணியில் பேட்டிங்கில் ஸ்மிர்தி மந்தனா (ஒருசதம், 2 அரைசதம் உள்பட 389 ரன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (ஒரு சதம், ஒரு அரைசதம் உள்பட 268 ரன்), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஸ்ரீசரனி (13 விக்கெட்), கிரந்தி கவுட், சினே ராணா, ராதா யாதவ் நம்பிக்கை அளிக்கிறார்கள். தீப்தி ஷர்மா (157 ரன், 17 விக்கெட்) ஆல்-ரவுண்டராக ஜொலிக்கிறார்.

    தென்ஆப்பிரிக்க அணி லீக் சுற்றில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் (10 புள்ளி) 3-வது இடம் பிடித்து அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. அரையிறுதியில் 4 முறை சாம்பியனான இங்கிலாந்தை விரட்டியடித்து முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.

    தென்ஆப்பிரிக்க அணியில் கேப்டன் லாரா வோல்வார்ட் சூப்பர் பார்மில் இருக்கிறார். அவர் இதுவரை ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 470 ரன்கள் எடுத்து ரன் குவிப்பில் முதலிடத்தில் உள்ளார். தஸ்மின் பிரிட்ஸ் (ஒரு சதம், ஒரு அரைசதத்துடன் 212 ரன்) கணிசமான பங்களிப்பை அளித்துள்ளார். மரிஜானே காப் (204 ரன், 12 விக்கெட்), நடினே டி கிளெர்க் (190 ரன், 8 விக்கெட்) ஆல்-ரவுண்டர்களாக அசத்துகிறார்கள்.

    தென்ஆப்பிரிக்க ஆண்கள் மற்றும் பெண்கள் அணி கடந்த ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு எல்லாம் இந்த முறை பரிகாரம் தேட முயற்சிப்பார்கள்.

    மொத்தத்தில் முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இது இறுதிப்போட்டி என்பதால் இரு அணிக்குமே கடும் சவாலும், நெருக்கடியும் இருக்கும். அதை எந்த அணி திறம்பட சமாளிக்கிறதோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 20-ல் இந்தியாவும், 13-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    போட்டி நடக்கும் நவிமும்பையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை பெய்வதற்கு 63 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டத்தில் முடிவு கிடைக்காமல் போனால் மாற்று நாளான மறுநாளில் நடைபெறும்.

    இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.39½ கோடி பரிசாக வழங்கப்படும். 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.19¾ கோடி கிடைக்கும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ஷபாலி வர்மா, ஸ்மிர்தி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், ராதா யாதவ் அல்லது சினே ராணா, கிரந்தி கவுட், ஸ்ரீ சரனி, ரேணுகா சிங்.

    தென்ஆப்பிரிக்கா: லாரா வோல்வார்ட் (கேப்டன்), தஸ்மின் பிரிட்ஸ், அன்னெகே பாஷ் அல்லது மசபடா கிளாஸ், சுனே லூஸ், மரிஜானே காப், சினாலோ ஜப்தா, அன்னெரி டெர்க்சன், குளோயி டிரையான், நடினே டி கிளெர்க், அயாபோங்கா காகா, மிலாபா.

    பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    Next Story
    ×