என் மலர்
கிரிக்கெட் (Cricket)

விராட், ரோகித் Farewell பெறாமலேயே ஓய்வு பெற்றது ஏமாற்றமானது- ரவி பிஷ்னோய்
- நீங்கள் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை யாரும் சொல்ல முடியாது.
- ஒருவேளை ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்கள் விரும்பும் நேரத்தில் விடைபெறும் போது பேர்வெல் கிடைக்கலாம்.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா. இவர்கள் இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டனர்.
அவர்கள் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ஜோடியாக ஓய்வு பெற்றனர். சமீப காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறிய அவர்கள் 2025 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்கள்.
அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுப்பதற்காக அவர்கள் பல வருடங்கள் கழித்து 2025 ரஞ்சிக்கோப்பையில் விளையாடித் தயாரானார்கள். ஆனால் அப்போது அவர்களை பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவினர் கழற்றி விட முடிவெடுத்தார்கள்.
அதை அறிந்த கேப்டனாகவே ரோகித் சர்மா இன்ஸ்டாகிராமில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்த சில நாட்களில் விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்ததாக அவர்கள் 2027 உலகக் கோப்பை வரை ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட விரும்புகிறார்கள்.
ஆனால் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலும் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் தொடருடன் அவர்களை கழற்றி விட்டு சுப்மன் கில் தலைமையிலான புதிய அணியை உருவாக்க பிசிசிஐ முயற்சித்து வருவதாக செய்திகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட், ரோகித் பேர்வெல் பெறாமலேயே ஓய்வு பெற்றது ஏமாற்றமானது என்று இளம் இந்திய வீரர் பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்கள் ஜோடியாக ஓய்வு பெற்றது உண்மையில் ஆச்சரியமானது. ஏனெனில் அவர்கள் களத்தில் விளையாடி ஓய்வு பெறுவதையே நீங்கள் பார்க்க விரும்புவீர்கள். அவர்களைப் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்கள் களத்தில் விளையாடி விடை பெறுவதைப் பார்ப்பது உங்களுக்கு கொஞ்சம் நன்றாக இருக்கும்.
என்னுடைய பார்வையில் இந்தியாவுக்காக அவர்கள் ஆற்றியப் பங்கை யாராலும் நெருங்கக் கூட முடியாது. எனவே அவர்களுக்கு நல்ல ஃபேர்வெல் கிடைக்க வேண்டும். ஒருவேளை ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்கள் விரும்பும் நேரத்தில் விடைபெறும் போது பேர்வெல் கிடைக்கலாம்.
நீங்கள் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை யாரும் சொல்ல முடியாது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் திடீரென ஓய்வு பெற்றது அதிர்வைப் போல் இருந்தது. ஏனெனில் திடீரென அவர்களுடைய இடத்தை யாரால் நிரப்ப முடியும்? என்பது போல் நீங்கள் உணர்கிறீர்கள்.
என்று பிஷ்னோய் கூறினார்.






