என் மலர்
கிரிக்கெட் (Cricket)

2027-ம் ஆண்டு உலகக் கோப்பை வரை ரோகித், கோலி விளையாட வேண்டும்- ராஸ் டெய்லர்
- ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் இன்னும் நல்ல உடல் தகுதியுடன் உள்ளனர்.
- கிரிக்கெட் உலகம் அவர்களை களத்தில் பார்க்க விரும்புகிறது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்கள் ரோகித் சர்மா, விராட் கோலி 20 ஓவர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். சர்வதேச ஒருநாள் போட்டியில் மட்டும் தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளனர். ஆனாலும் பல மாதங்கள் விளையாடாமல் ஓய்வில் இருக்கும் அவர்களுக்கு ஒரு நாள் அணியில் தொடர்ச்சியாக இடம் கிட்டுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர் நேற்று டெல்லியில் அளித்த பேட்டியில், 'ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் இன்னும் நல்ல உடல்தகுதியுடன் உள்ளனர். தொடர்ந்து ரன்களும் குவிக்கிறார்கள். அதனால் ஓய்வு பெற வேண்டுமா? இல்லையா? என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வளவு அதிகமாக கிரிக்கெட் விளையாடி உள்ள அவர்கள் அதற்காக தங்களது உடலை வருத்தி கடும் பயிற்சி எடுக்கிறார்கள். குழந்தைகள், குடும்பத்தினரை விட்டு கிரிக்கெட்டுக்காக நிறைய நேரம் செலவிடுகிறார்கள். கிரிக்கெட் உலகம் அவர்களை களத்தில் பார்க்க விரும்புகிறது. எனவே 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை வரை அவர்கள் அணியில் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விராட் கோலி இளம் வீரராக 18-19 வயதில் இணைந்தார். அப்போது அவர் சற்று குண்டாக இருந்தார். அந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவின் கேமரூன் ஒயிட், விராட் கோலி உலக தரம்வாய்ந்த வீரராக உருவெடுப்பார் என்று கணித்தார். அதே போல் அற்புதமான வீரராக மாறி இருக்கிறார். பெங்களூருவுக்காக அவர் மிகவும் விசுவாசமாக இருப்பது தெளிவாக தெரிகிறது. அது மட்டுமின்றி இந்திய கிரிக்கெட்டுக்கும், உலக கிரிக்கெட்டுக்கும் அவர் அளித்துள்ள பங்களிப்பு மகத்தானது. ஐ.பி.எல். கோப்பை ஏக்கத்தை தணித்து சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு வாழ்த்துகள்' என்றார்.






