என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    TNPL கோப்பையை வெல்லப்போவது யார்?: திருப்பூர் - திண்டுக்கல் அணிகள் இன்று பலப்பரீட்சை
    X

    TNPL கோப்பையை வெல்லப்போவது யார்?: திருப்பூர் - திண்டுக்கல் அணிகள் இன்று பலப்பரீட்சை

    • இறுதிப்போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது.
    • சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

    9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் அணி லீக் சுற்றில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. அடுத்து முதலாவது தகுதி சுற்றில் 79 ரன் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.

    திருப்பூர் அணியில் பேட்டிங்கில் துஷர் ரஹேஜா (411 ரன்), அமித் சாத்விக், பிரதோஷ் ரஞ்சன் பால், சசிதேவும், பந்து வீச்சில் இசக்கிமுத்து (12 விக்கெட்), டி.நடராஜன், சிலம்பரசனும் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் சாய் கிஷோர் (128 ரன், 12 விக்கெட்) ஆல்-ரவுண்டராக அசத்துகிறார்.

    ஆர்.அஸ்வின் தலைமையிலான நடப்பு சாம்பியன் திண்டுக்கல் அணி லீக் சுற்றில் 4 வெற்றி, 3 தோல்வி கண்டு 8 புள்ளிகளுடன் 3-வது இடம் பெற்றது. இதைத்தொடர்ந்து வெளியேற்றுதல் சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சியையும், 2-வது தகுதி சுற்றில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசையும் வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    திண்டுக்கல் அணியில் பேட்டிங்கில் ஷிவம் சிங் (327 ரன்), விமல் குமார், பாபா இந்திரஜித், ஹன்னி சைனியும், பந்து வீச்சில் ஜி.பெரியசாமி (11 விக்கெட்), வருண் சக்ரவர்த்தி (10 விக்கெட்), சசிதரணும், ஆல்-ரவுண்டராக கேப்டன் அஸ்வினும் (296 ரன், 13 விக்கெட்) வலுசேர்க்கின்றனர்.

    லீக் ஆட்டத்தில் திருப்பூர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கலை தோற்கடித்து இருந்தது. இதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள திண்டுக்கல் அணி தீவிரம் காட்டும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு அனுகூலமாக இருக்கும். இரு அணிகளும் சமபலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.

    ஒட்டுமொத்தத்தில் இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5-ல் திண்டுக்கல்லும், ஒன்றில் (நடப்பு சீசனில்) திருப்பூரும் வெற்றி பெற்றுள்ளன.

    இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.1.7 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

    இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    திருப்பூர்: அமித் சாத்விக், துஷர் ரஹேஜா, சாய் கிஷோர் (கேப்டன்), முகமது அலி, சசிதேவ், பிரதோஷ் ரஞ்சன் பால், மோகன் பிரசாத், சிலம்பரசன், மதிவாணன், டி.நடராஜன், இசக்கிமுத்து, அனோவன்கர்.

    திண்டுக்கல்: ஆர்.அஸ்வின் (கேப்டன்), ஷிவம் சிங், பாபா இந்திரஜித், மான் பாப்னா, விமல் குமார், ஹன்னி சைனி, தினேஷ், கார்த்திக் சரண், புவனேஷ்வர், வருண் சக்ரவர்த்தி, சசிதரண், ஜி.பெரியசாமி.

    இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    Next Story
    ×