என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஹீரோவாக மட்டுமல்ல சில நேரங்களில் வில்லனாகவும் இருக்க வேண்டும்- சஞ்சு சாம்சன்
- நானும் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டுக்காக விளையாடுகிறேன்.
- சில நேரங்களில் வில்லன், காமெடியனாகவும் இருக்க வேண்டும்.
17-வது ஆசிய கோப்பை போட்டி கடந்த 09-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில் 20 ஓவர் அணிக்கு துணை கேப்டனாக தேர்வு பெற்றுள்ளார்.
இதனால் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து சுப்மன் கில் தொடக்க வரிசையில் விளையாடினார். கடந்த சில டி20 போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி தொடர்ந்து 2 சதங்களை விளாசிய சஞ்சு சாம்சன் சுப்மன் கில் வருகையால் எந்த வரிசையில் ஆடுவார் என்ற நிலை ஏற்பட்டது.
அந்த வகையில் ஆசிய கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் 3-வது வரிசை மற்றும் 4,5 வரிசையிலும் ஆடினார். அவருக்கான நிரந்தர இடம் என்று ஏதும் கொடுக்கவில்லை. குறிப்பாக நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் விழுந்தும் சஞ்சு சாம்சன் களமிறங்காமல் இருந்தார்.
அவரை மீண்டும் அணியில் இருந்து கழற்றி விட நிர்வாகம் முயற்சிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பிறகு அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதில் நீங்கள் எந்த வரிசையில் விளையாட விருப்பமாக உள்ளீர்கள் என கேட்கப்பட்டது.
அதற்கு சஞ்சு சாம்சன் அளித்த பதில் பின்வருமாறு:-
40 ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து நாட்டின் உயரிய விருது பெற்ற மோகன்லால், எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். நானும் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டுக்காக விளையாடுகிறேன். அதனால், ஹீரோவாக மட்டுமாகவே இருப்பேன் என்று சொல்லமாட்டேன். சில நேரங்களில் வில்லன், காமெடியனாகவும் இருக்க வேண்டும். எல்லா இடத்திலும் இறங்கி விளையாட வேண்டும்.
என அவர் கூறினார்.






