என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு
- சஞ்சுவுக்கு பதிலாக ஜடேஜாவை ரூ.14 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டிரேடிங் செய்திருந்தது.
- சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.18 கோடிக்கு டிரேடிங் முறையில் வாங்கியது.
இந்தியாவின் டி20 கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-வது சீசன் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தொடருக்கான வீரர்கள் மினி ஏலமும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சஞ்சு சாம்சன் ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.18 கோடிக்கு டிரேடிங் முறையில் வாங்கப்பட்டார்.
அதே சமயம் சஞ்சுவுக்கு பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிஎஸ்கே ஆல் ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜாவை ரூ.14 கோடிக்கும், சாம் கரணை ரூ.2.4 கோடிக்கும் டிரேடிங் செய்திருந்தது. இதனால் எதிர் வரும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக யார் செயல்படுவார் என்ற கேள்விகளும் அதிகரித்திருந்தன.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை ராஜஸ்தான் அணிக்காக 84 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7 அரைசதங்களுடன் 1,566 ரன்களைச் சேர்த்துள்ளார்.
மேலும் கடந்தாண்டு சஞ்சு சாம்சன் காயம் காரணமாக முதல் சில போட்டிகளை தவறவிட்ட நிலையில், ரியான் பராக் பொறுப்பு கேப்டனாக சில போட்டிகளில் செயல்பட்ட நிலையில், தற்சமயம் அணியின் முழு நேர கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.






