என் மலர்
கிரிக்கெட் (Cricket)

தொடரை தீர்மானிக்கும் 4ஆவது டெஸ்டில் பும்ரா விளையாட வேண்டும்: இர்பான் பதான் சொல்கிறார்
- 4ஆவது போட்டியில் பும்ரா விளையாடுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
- தொடரை தீர்மானிக்கும் போட்டி என்பதால், பும்ரா கட்டாயம் விளையாட வேண்டும் என்கிறார் இர்பான் பதான்.
இந்தியா- இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதல் போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் 2ஆவது போட்டியில் அவரை கட்டாயம் களம் இறக்க வேண்டும் என கிரிக்கெட் வல்லுனர்கள் வலியுறுத்தினர்.
ஆனால் 2ஆவது போட்டியில் பும்ரா களம் இறக்கப்படவில்லை. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அதன்பின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3ஆவது போட்டியில் பும்ரா விளையாடினார். அதில் இந்தியா தோல்வியடைந்தது.
4ஆவது போட்டி வருகிற 23ஆம் தேதி ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற இருக்கிறது. ஒருவேளை இந்த போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம். ஆனால் இந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்தால் தொடரை இழந்துவிடும். இருந்தபோதிலும், பும்ரா களம் இறக்கப்படுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
இந்த நிலையில் 4ஆவது போட்டியில் பும்ரா களம் இறக்கப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இர்பான் பதான் கூறியதாவது:-
எல்லா அணிகளும் அவர்களுடைய சிறந்த வீரர் விளையாட வேண்டும் விரும்பும். ஆனால் அது அந்த வீரருடைய பணிச் சுமையை சார்ந்தது. அவர் சோர்வாக இருப்பதாக உணர்கிறாரா? மற்ற ஏதும் சிக்கல் உள்ளதா? என்பதை பொருத்தது. 3ஆவது போட்டிக்கும், 4ஆவது போட்டிக்கும் இடையில் 9 நாட்கள் இடைவெளி உள்ளது. இது குணமடைவதற்கு போதுமானதை விட அதிகமான நாட்களாக இருக்கும்.
இது தொடரை தீர்மானிக்கும் போட்டி. காயம் இல்லையனெ்றால், அவர் கட்டாயம் விளையாட வேண்டும். ஐசிசி சாம்பியன்ஷிப்பில், இதுபோன்ற முக்கிய சூழ்நிலையில், மாற்றம் செய்வது அணி நிர்வாகம் அல்லது பந்து வீச்சாளர்களுக்கு சிறந்தது அல்ல. இதுபோன்ற சூழ்நிலையில், பும்ரா அணியில் இருப்பது கூடுதல் மதிப்பை கொடுக்கும்.
இவ்வாறு இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.






