என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் - பூரனை பின்னுக்கு தள்ளி ஸ்ரேயஸ் முதல் இடத்தை பிடிப்பாரா?
- மும்பை அணிக்கு எதிரான 'குவாலிபையர்2' ஆட்டத்தில் ஸ்ரேயஸ் 8 சிக்சர்கள் அடித்தார்.
- நடப்பு ஐபிஎல் சீசனில் நிக்கோலஸ் பூரன் (லக்னோ) 40 சிக்சர்களை அடித்துள்ளார்.
ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன்களை எடுப்பவர்களுக்கு ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்துபவர்களுக்கு ஊதா நிற தொப்பியும் வழங்கப் படும்.
இந்த சீசனில் தமிழக வீரர் சாய்சுதர்சன் முதல் இடத்தில் உள்ளார். குஜராத் அணியின் தொடக்க வீரரான அவர் 759 ரன் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்ய குமார் 717 ரன்னுடனும், குஜராத் கேப்டனான சுப்மன் கில் 650 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளார்.
இறுதிப்போட்டியில் ஆடும் பெங்களூரு அணி வீரர் வீராட்கோலி 614 ரன்னுடன் 5-வது இடத்திலும், பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் 603 ரன்னுடன் 6-வது இடத்திலும் உள்ளனர். இருவரும் சாய் சுதர்சனை நெருங்குவது மிகவும் கடினமானது. இதனால் ஆரஞ்சு தொப்பி சாய் சுதர்சனுக்கு கிடைக்க அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
அதே நேரத்தில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் ஸ்ரேயஸ் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.
மும்பை அணிக்கு எதி ரான 'குவாலிபையர்2' ஆட்டத்தில் அவர் 8 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் 39 சிக்சர்களுடன் 2-வது இடத்துக்கு முன்னேறினார். முதல் இடத்தில் உள்ள நிக்கோலஸ் பூரன் (லக்னோ) 40 சிக்சர்களை அடித்துள்ளார். இன்றைய இறுதிப் போட்டியில் 2 சிக்சர்கள் அடித்தால் ஸ்ரேயஸ் முதல் இடத்தை பிடிப்பார். பஞ்சாப் அணி தொடக்க வீரரான பிரப்சிம்ரன் சிங் 28 சிக்சர்களுடன் 7-வது இடத்தில் உள்ளார்.
குஜராத் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 25 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். பெங்களூரு அணி வீரர் ஹேசல்வுட் 21 விக்கெட் கைப்பற்றி 4-வது இடத்தில் உள்ளார். அவர் முதல் இடத்தை பிடிக்க இன்னும் 4 அல்லது 5 விக்கெட் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.






