என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ்க்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
- நிக்கோலஸ் பூரன் 44 ரன்னும், படோனி 41 ரன்களும் சேர்த்தனர்.
- அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.
ஐபிஎல் 2025 தொடரின் 13-ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். முதல் இரண்டு போட்டிகளில் அரைசதம் விளாசிய மிட்செல் மார்ஷ், தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். நிக்கோலஸ் பூரன் நிதானமாக விளையாடினார். மார்கிராம் அதிரடியாக விளையாட முயற்சித்தார். இருந்தாலும் 18 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 2 ரன்னில் வெளியேறினார்.
இதனால் லக்னோ 35 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது திணறியது. 4-வது விக்கெட்டுக்கு பூரன் உடன் ஆயுஷ் படோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. வாய்ப்பு கிடைக்கும்போது பூரன் பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் விரட்டினார்.
அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், பூரன் 30 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் ஆட்டமிழந்தார். அப்போது லக்னோ 11.3 ஓவரில் 89 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து வந்த மில்லர் 19 பந்தில் ஆட்டமிழந்தார். 6-வது விக்கெட்டுக்கு ஆயுஷ் படோனி உடன் அப்துல் சமாத் ஜோடி சேர்ந்தார். அப்துல் சமாத் அதிரடியாக விளையாட லக்னோ அணி 150 ரன்னைக் கடந்தது. அர்ஷ்தீப் வீசிய 18-ஆவது ஓவரில் லக்னோ 20 ரன்கள் விளாசியது.
யான்சன் வீசிய 19-ஆவது ஓவரில் 8 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் 19 ஓவரில் 164 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரின் 2-ஆவது பந்தில் படோனி ஆட்டமிழந்தார். அவர் 33 பந்தில் 41 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
4-ஆவது பந்தில் அப்துல் சமாத் ஆட்டமிழந்தார். இவர் 12 பந்தில் 27 ரன்கள் எடுத்தார். கடைசி 2 பந்தில் ஒரு வைடு உடன் 3 ரன்கள் அடிக்க இந்த ஓவரில் 7 ரன்கள் கிடைத்தது. இதனால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.
பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவரில் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். பெர்குசன், மேக்ஸ்வெல், யான்சன், சாசல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.






