என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம்: 2ஆம் இடம் பிடித்தார் ரொமாரியோ ஷெப்பர்டு
- ஜெய்ஸ்வால் 13 பந்தில் அரைசதம் அடித்துள்ளார்.
- கே.எல். ராகுல், கம்மின்ஸ் ஆகிய இருவரும் 14 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளனர்.
ஐபிஎல் 2025 சீசனின் 52ஆவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய ஆர்சிபி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்துள்ளது.
ஆர்சிபி ஒரு கட்டத்தில் 17.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்திருந்தது. 6ஆவது விக்கெட்டுக்கு டிம் டேவிட் உடன் ரொமாரியோ ஷெப்பர்டு ஜோடி சேர்ந்தார். 19ஆவது ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தார்.
4ஆவது மற்றும் 5ஆவது பந்தை மீண்டும் சிக்சருக்கு தூக்கினார். 5ஆவது பந்து நோ-பால் ஆகும். அதற்குப் பதிலாக வீசிய பந்தில் ரன் அடிக்கவில்லை. கடைசி பந்தை பவுண்டரிக்கு துரத்தினார்.
இதனால் 4 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 33 ரன்கள் விட்டுக்கொடுத்தார் கலீல் அகமது. இந்த ஓவரில் 32 ரன்கள் அடித்தார் ஷெப்பர்டு. 9 பந்தில் 33 ரன்கள் எடுத்திருந்தார்.
கடைசி ஓவரை பதிரனா வீசினார். முதல் பந்தில் டிம் டேவிட் ஒரு ரன் எடுத்தார். 2ஆவது பந்தை ஷெப்பர்டு பவுண்டரிக்கு விரட்டினார். 3ஆவது பந்தில் ரன் அடிக்கவில்லை. 4ஆவது பந்தை பவுண்டரிக்கு துரத்தினார். 5ஆவது மற்றும் 6ஆவது பந்தில் இமாலய சிக்ஸ் அடித்தார். அத்துடன் ரொமாரியோ ஷெப்பர்டு 14 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 53 ரன்கள் விளாசினார்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த 2ஆவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் ஜெய்ஸ்வால் (ராஜஸ்தான் ராயல்ஸ்) 2023ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கெதிராக 13 பந்தில் அரைசதம் அடித்துள்ளார். இதுதான் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதமாக இருந்து வருகிறது.
கே.எல். ராகுல் (பஞ்சாப் கிங்ஸ்) 2018ஆம் ஆண்டு டெல்லிக்கு எதிராக 14 பந்தில் அரைசதம் அடித்துள்ளார். பேட் கம்மின்ஸ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) 2022ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 14 பந்தில் அரைசதம் அடித்துள்ளார்.