என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வெற்றியை நோக்கி SA: 4-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்தியா
- தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 260 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
- நாளை கடைசி நாளில் இந்திய அணி வெற்றி பெற 522 ரன்கள் தேவை.
கவுகாத்தி:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.
தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டு பாலோ ஆன் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்கா பாலோ ஆன் கொடுக்கவில்லை.
ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 58 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினார்கள். மார்கோ யான்சென் 6 விக்கெட்டும், ஹார்மர் 3 விக்கெட்டும், கேசவ் மகராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
288 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை விளையாடியது. ஸ்டப்ஸ் 94 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். உடனே கேப்டன் பவுமா டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். தென் ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சில் 260 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 548 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் இந்திய அணி 549 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து கடினமான இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல்- ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 13 ரன்னிலும் கேஎல் ராகுல் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. 15-வது ஓவர் நடந்து கொண்டிருக்கும் போது போதிய வெளிச்சமின்மை காரணமாக 4-ம் வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
நாளை கடைசி நாளில் இந்திய அணி வெற்றி பெற 522 ரன்கள் தேவை. கைவசம் 8 விக்கெட்டுகள் மீதம் உள்ளது.






