என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வெளிநாட்டு அணிகளுக்காக ஆடும் இந்திய வம்சாவளி வீரர்கள்- அமெரிக்க அணியில் 9 பேருக்கு இடம்
- அமெரிக்க அணிக்கு தேர்வான 15 வீரர்களில் 9 பேர் இந்திய வம்சாவளியினர்.
- ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளில் தலா 7 பேர் இந்திய பூர்வவாசிகள் இருக்கிறார்கள்.
டெல்லி:
விரைவில் தொடங்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்கும் குட்டி அணிகளில் இந்தியாவை பூர்விகமாக கொண்ட வீரர்கள் நிறைய பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தாய் மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளனர்.
இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை வருகிற 7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சந்திக்கிறது.
அமெரிக்க அணிக்கு தேர்வான 15 வீரர்களில் 9 பேர் இந்திய வம்சாவளியினர். கேப்டன் மோனங்க் பட்டேல் குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் பிறந்தவர். 19 வயதுக்குட்பட்டோருக்கான குஜராத் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்து விளையாடி இருக்கிறார்.
2024-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையில் அமெரிக்கா சூப்பர் ஓவரில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தது. அதில் மோனங்க் பட்டேல் அரைசதம் அடித்து அசத்தினார். 32 வயதான மோனங்க் பட்டேல் கூறுகையில், நானும், பும்ராவும் இளம் வயதில் சிவப்பு மற்றும் வெள்ளைநிற பந்து போட்டியில் இணைந்து விளையாடி உள்ளோம். உண்மையிலேயே அவை சிறப்பான தருணங்கள். அது எனது கிரிக்கெட் பயணத்தின் ஆரம்ப கட்டம். அப்போது பும்ரா விளையாடிய விதத்தை பார்த்த போது, அவர் சிறப்பு வாய்ந்த பவுலராக உருவெடுப்பார் என்பது தெரியும். நிச்சயம் உலகக் கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்துவார்' என்றார்.
நெட்ராவால்கர்
அமெரிக்க அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் சவுரப் நெட்ராவால்கர், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடியவர். மும்பையைச் சேர்ந்த அவர் சாப்ட்வேர் என்ஜினீயர் ஆவார். அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்த பிறகு அந்த நாட்டு அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். இப்போது தொடக்க ஆட்டத்தில் தனது முன்னாள் மும்பை வீரர் சூர்யகுமாருக்கு எதிராக களம் காணப் போகிறார்.
34 வயதான நெட்ராவால்கர் கூறுகையில், 'சொந்த ஊரில் அதுவும் சூர்யகுமாருக்கு எதிராக நான் எந்த மாதிரி உணர்வை வெளிப்படுத்துவேன் என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயம் உணர்வுபூர்வமாக இருக்கும். எனது கிரிக்கெட் வாழ்க்கை ஒரு முழுமையான வட்டத்தை நிறைவு செய்வது போன்றது. அதாவது நான் மும்பையில் தான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன். அதன் பிறகு கிரிக்கெட்டை கைவிட்டு அமெரிக்காவுக்கு சென்றேன். மீண்டும் நான் கிரிக்கெட் விளையாடுவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. இப்போது பிறந்த ஊரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது' என்றார்.
ஜஸ்பிரீத் சிங்- ஆர்யன் தத்
இத்தாலி அணி, உலகக் கோப்பையில் அறிமுக அணியாக அடியெடுத்து வைக்கிறது. இதில் அந்த அணிக்காக ஆடும் 32 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் சிங் கவனத்தை ஈர்க்கிறார். இவர் பஞ்சாப் மாநிலம் பாக்வாராவில் பிறந்தவர். 2006-ம் ஆண்டு அவரது குடும்பம் இத்தாலிக்கு குடி பெயர்ந்தது. அங்கு கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய அவர் 2019-ம் ஆண்டில் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். பொருளாதார நெருக்கடியால் சிறிது காலம் டாக்சி ஓட்டுனராக பணிபுரிந்த அவருக்கு ஐ.சி.சி. போன்ற பெரிய போட்டிகளில் கால்பதிப்பது கனவாகவே இருக்கும்.
நெதர்லாந்து அணியில் அங்கம் வகிக்கும் ஒரே இந்திய வம்சாவளியான சுழற்பந்து வீச்சாளர் ஆர்யன் தத்துக்கு ஏற்கனவே 2023-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய ரசிகர்கள் முன் விளையாடிய அனுபவம் உண்டு. 22 வயதான ஆர்யன் தத், இந்த உலகக் கோப்பையில் முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் நோக்குடன் தயாராகி வருகிறார். தத்தின் குடும்பம் 1980-களில் பஞ்சாப்பில் இருந்து நெதர்லாந்துக்கு சென்று விட்டது. என்றாலும் அவரது உறவினர்கள் இன்னும் பஞ்சாப்பில் இருக்கிறார்கள்.
கேப்டன்கள்
கனடா அணியில் 11 பேர் இந்திய நறுமணம் உடையவர்கள். இவர்களில் கேப்டன் தில்பிரீத் பஜ்வாவும் ஒருவர். ஜூனியர் அளவிலான கிரிக்கெட் போட்டிகளை பஞ்சாப்பில் விளையாடினாலும் எதிர்பார்த்த வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. 2020-ம் ஆண்டு கனடாவுக்கு இடம் பெயர்ந்த அவர் இன்று அந்த அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளார். ஆல்-ரவுண்டரான 23 வயதான தில்பிரீத் ஏற்கனவே 2024-ல் உலகக் கோப்பையில் விளையாடி இருக்கிறார். 2 ஆண்டு கழித்து இப்போது பிறந்த மண்ணில் இன்னொரு உலகக் கோப்பையில் கால்பதிக்கிறார்.
இதே போல் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளில் தலா 7 பேர் இந்திய பூர்வவாசிகள் இருக்கிறார்கள். தில்பிரீத் போலவே பஞ்சாப்பில் பிறந்தவரான ஜதிந்தர் சிங்கும் தான் தேர்வு செய்த நாட்டின் அணியை வழிநடத்தும் கவுரவத்தை பெற்றுள்ளார். ஓமன் அணியின் கேப்டனான அவர் 10 ஆண்டுக்கு மேலாக விளையாடி வருகிறார். இதுவரை 133 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஓமன் அணியின் அனைத்து லீக் ஆட்டங்களும் (ஜிம்பாப்வே, இலங்கை அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடன் மோத வேண்டும்) இலங்கையில் நடக்கிறது. அந்த அணி லீக் சுற்றை தாண்டுவது குதிரை கொம்பு என்பதால் சொந்த மண்ணில் உலகக் கோப்பையில் ஆட வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறுவது கடினமே.






