என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி முன்னிலை பெறுமா?: இன்று 4வது டி20 போட்டி
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி முன்னிலை பெறுமா?: இன்று 4வது டி20 போட்டி

    • முதல் டி20 ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.
    • மெல்போர்னில் நடந்த 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது.

    கோல்ட்கோஸ்ட்:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.

    இதையடுத்து, 5 போட்டி கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஹோபர்ட்டில் நடந்த 3-வது ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 4-வது டி20 போட்டி கோல்டு கோஸ்டில் உள்ள கராராவில் இன்று நடைபெறுகிறது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று முன்னிலை பெறுமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் கடந்த ஆட்டத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதேபோல மற்றோரு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி யும் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ளார். வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கும் தனக்கு கிடைத்த வாய்ப்பில் திறமையை வெளிப்படுத்தினார்.

    தொடக்க வீரர்களில் துணை கேப்டன் சுப்மன் கில்லின் ஆட்டம் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை. இதனால் சஞ்சு சாம்சனுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாம். அவருக்கு பதிலாக இடம்பெற்ற ஜிதேஷ் சர்மா 3-வது போட்டியில் வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். எனவே அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்றே கருதப்படுகிறது.

    மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் கேப்டன் மிட்செல் மார்ஷ், டிம் டேவிட், ஸ்டோய்னிஸ் ஆகியோரும், பந்துவீச்சில் நாதன் எல்லீஸ், ஹேசில்வுட் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் மோதிய 35 டி20 போட்டியில் இந்தியா 21-ல், ஆஸ்திரேலியா 12-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி முடிவு இல்லை.

    இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    Next Story
    ×