என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சுப்மன் கில், ஜெய்ஸ்வால் அசத்தல் சதம்: முதல் நாளில் இந்தியா 359 ரன் குவிப்பு
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதல் நாள் முடிவில் இந்தியா 359 ரன்கள் குவித்தது.
லீட்ஸ்:
இங்கிலாந்து-இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால்- கே.எல்.ராகுல் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 42 ரன்னில் அவுட்டானார். அடுத்து அறிமுகப் போட்டியில் களமிறங்கிய சாய் சுதர்சன் டக் அவுட்டாகி வெளியேறினர்.
3வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன், சுப்மன் கில் இணைந்து பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். இது அவரது 5-வது டெஸ்ட் சதம் ஆகும்.
3வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்த நிலையில் ஜெய்ஸ்வால் 101 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ரிஷப் பண்ட் இறங்கினார்.
இந்த ஜோடி மேலும் விக்கெட் விழாமல் நிதானமாக ஆடியது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் சுப்மன் கில் அபாரமாக ஆடி சதமடித்தார். ரிஷப் பண்ட் அரை சதம் கடந்தார்.
முதல் நாள் முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்துள்ளது. சுப்மன் கில் 127 ரன்னும், ரிஷப் பண்ட் 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
கேப்டனாக அறிமுகமான முதல் போட்டியில் சுப்மன் கில் சதமடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.






