என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பும்ராவை தொடர்ந்து இவரும் 2ஆவது டெஸ்டில் விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல்..!
- முதல் டெஸ்டில் பும்ரா 43.4 ஓவர்கள் வீசியுள்ளார்.
- பணிச்சுமை காரணமாக 2ஆவது டெஸ்டில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பும்ரா 24.4 ஓவரில் 83 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். 2ஆவது இன்னிங்சில் 19 ஓவர்கள் வீசினார். 57 ரன்கள் கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை.
இங்கிலாந்துக்கு தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே, 3 போட்டிகளில்தான் பும்ரா விளையாடிவார் என தெரிவிக்கப்பட்டது. முதல் டெஸ்டில் 43.4 ஓவர்கள் வீசிய பும்ரா, 2ஆம் போட்டிக்கான நேற்றைய பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால் எட்ஜ்பாஸ்டனில் வருகிற 2ஆம் தேதி தொடங்கும் 2ஆவது டெஸ்டில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் பிரசித் கிருஷ்ணாவும் பயிற்சி மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இவர் முதல் இன்னிங்சில் 20 ஓவர்கள் வீசி 128 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். 2ஆவது இன்னிங்சில் 15 ஓவர்கள் வீசி 92 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். 5 விக்கெட் வீழ்த்தினாலும் ஓவருக்கு சராசரியாக 6 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்துள்ளார். இதனால் 2ஆவது டெஸ்டில் ஓரங்கட்டப்படலாம் எனத் தெரிகிறது.
பும்ராவுடன் இவரும் 2ஆவது டெஸ்ட்டில் இடம்பெறவில்லை என்றால் ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியில் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது.
இந்திய பேட்டர்கள் 5 சதங்கள் அடித்த நிலையிலும், 20 விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் இந்தியா தோல்வியை சந்தித்தது. இதனால் பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் ஆகும். முதல் டெஸ்டில் சிராஜ் மிகப்பெரிய அளவில் சாதிக்கவில்லை. பும்ரா இல்லாத நிலையில் பந்து வீச்சை வழிநடத்தும் சீனியர் வீரராக உள்ளார். இவர் நீக்கப்பட வாய்ப்பு மிகவும் குறைவுதான்.
2ஆவது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஜாஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






