என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட்டை புற்றுநோயுடன் ஒப்பிட்டு விமர்சித்த பயிற்சியாளர் சமி
- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டை பொறுத்தவரை நீண்டகாலமாக நிதி நெருக்கடியில் தவிக்கிறது.
- அது கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாட்டையும், வீரர்களின் மனஉறுதியையும் பாதிக்கிறது.
புதுடெல்லி:
அகமதாபாத்தில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 3-வது நாளிலேயே இமாலய வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு கைகொடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது முதல் இரு நாளில் பேட்டிங்குக்கும், 3-வது நாளில் இருந்து சுழலுக்கும் ஒத்துழைக்கும் என இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆடும் விதத்தை பார்க்கும்போது இந்த டெஸ்டிலும் தாக்குப்பிடிப்பார்களா? என்பது சந்தேகம் தான். அந்த நாட்டில் திறமையான வீரர்கள் பலர் இருந்தும் பணம் கொழிக்கும் 20 ஓவர் லீக் போட்டிக்கு முக்கியத்துவம் அளிப்பதால், டெஸ்ட் கிரிக்கெட் நலிந்து போய் விட்டது.
இது குறித்து நேற்று நிருபர்களிடம் பேசிய வெஸ்ட் இண்டீஸ் தலைமை பயிற்சியாளர் டேரன் சேமி கூறுகையில், 'நாங்கள் இந்திய மண்ணில் கடைசியாக டெஸ்ட் தொடரை 1983-ம் ஆண்டில் கைப்பற்றினோம். அப்போது நான் பிறந்தேன். இப்போது அணியின் பயிற்சியாளராக இருப்பதால் என்னை தான் அனைவரும் விமர்சிப்பார்கள் என்பது தெரியும். ஆனால் இந்த நிலைமை 2 ஆண்டுக்கு முன்பு வந்ததில்லை.
வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட மறுக்கும் கலாசாரம் நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கி விட்டது. இன்னும் சொல்லப்போனால் இது புற்றுநோய் போன்றது. அடிப்படை கட்டமைப்பில் ஆழமாக ஊடுருவிவிட்டது. எனவே பிரச்சினை ஆடுகளத்தில் இல்லை. அணியின் கட்டமைப்பில் உள்ளது. இப்போதைக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட யார் ஆர்வமாக இருக்கிறார்களோ அத்தகைய வீரர்களுடன் மட்டுமே இணைந்து பணியாற்றுகிறேன்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டை பொறுத்தவரை நீண்டகாலமாக நிதி நெருக்கடியில் தவிக்கிறது. அது கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாட்டையும், வீரர்களின் மனஉறுதியையும் பாதிக்கிறது. போதிய ஸ்பான்சர்ஷிப் கிடைத்தால் அணியின் முன்னேற்றத்துக்கு உதவிகரமாக இருக்கும்' என்றார்.






