என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா ஆறுதல் வெற்றி பெறுமா? நாளை கடைசி ஒருநாள் போட்டி
- இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை.
- விராட் கோலி 2 போட்டியிலும் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனதால் நெருக்கடியில் உள்ளார்.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இதில் பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த 2-வது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சிட்னியில் நடக்கிறது. இந்த ஆட்டம் நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது. ஏற்கனவே தொடரை இழந்துவிட்ட இந்திய அணி, ஆறுதல் வெற்றி பெற போராடும். மேலும் தொடரை முழுமையாக இழப்பதை தவிர்க்க முயற்சிக்கும்.
இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. எனவே அதில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம். விராட் கோலி 2 போட்டியிலும் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனதால் நெருக்கடியில் உள்ளார். அதேபோல் கேப்டன் சுப்மன்கில்லும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ரோகித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் உள்ளனர்.
கடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தாலும் அது வெற்றிக்கு உதவவில்லை. இதனால் பந்துவீச்சு துறையிலும் மற்றும் பீல்டிங்கிலும் முன்னேற்றம் காண வேண்டும்.
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அந்த அணி பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், மெட் ரென்ஷா ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஹேசல் வுட், ஆடம் ஜம்பா, பார்ட் லெட் ஆகியோர் உள்ளனர்.






