என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆகாஷ் தீப் குதிரை போன்றவர்: முகமது சிராஜ் சொல்கிறார்
- வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார்.
- அவருடன் மகிழ்ச்சியாக பந்து வீசினேன்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 84 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
6ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ப்ரூக்- ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ப்ரூக் 158 ரன்களும், ஜெமி ஸ்மித் 184 ரன்களும் விளாசினர். 2ஆவது புதிய பந்தை எடுத்த பிறகு ஆகாஷ் தீப், முகமது சிராஜ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார். இதனால் இந்த ஜோடி 387 ரன்னில் பிரிந்தது. அதன் பிறகு இங்கிலாந்து 407 ரன்களில் ஆல்அவுட் ஆனது. முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
இதனால் இந்தியா முதல் இன்னிங்சில் 180 ரன்கள் முன்னிலைப் பெற்றது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 இன்னிங்சில் 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை 244 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் ஆகாஷ் தீப் குதிரை போன்றவர் என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகமது சிராஜ் கூறியதாவது:-
ஆகாஷ் தீப் குதிரை போன்றவர். வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார். வாய்ப்பு கிடைத்தபோது, சாதிக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். உண்மையிலேயே அவருடன் மகிழ்ச்சியாக பந்து வீசினேன்.
பொறுப்பு கொடுக்கும்போது அதை விரும்புகிறேன். என்னுடைய பக்கத்தில் இருந்து ரன்கள் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய இலக்கு. முடிந்தவரை பேட்ஸ்மேனை நெருக்கடிக்குள்ளாக்கி கட்டுக்கோப்பாக பந்து வீச முயற்சித்தேன்.
இவ்வாறு முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.