என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கருண் நாயரை கழற்றி விட காரணம் என்ன: அஜித் அகர்கர் விளக்கம்
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கருண் நாயருக்கு இடம் கிடைக்கவில்லை.
- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரிடம் இருந்து நாங்கள் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்தோம் என அகர்கர் கூறினார்.
மும்பை:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணியில், சீனியர் வீரரான கருண் நாயர், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக 7 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம்பிடித்த கருண் நாயர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருடன் நீக்கப்பட்டிருப்பது பேசும்பொருளாக மாறி உள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரிடம் இருந்து நாங்கள் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்தோம் என்றும் அதை அவர் பூர்த்தி செய்யவில்லை எனவும் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரிடம் இருந்து நாங்கள் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்தோம். அதனை அவர் பூர்த்தி செய்யவில்லை. அதனால் மிடில் ஆர்டரில் தேவ்தத் படிக்கலால் கூடுதலாக பங்களிக்க முடியும் என்று நம்புகிறேன்.
இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு வீரருக்கும் 15 முதல் 20 டெஸ்ட் போட்டிகள் வரை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே எங்களின் ஆசையாக உள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை.
தேவ்தத் படிக்கல் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி இருந்தார். அதேபோல் தரம்சாலாவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடி அரைசதம் விளாசி இருந்தார். இந்திய ஏ அணிக்காக ஆடிய போட்டிகளிலும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.
என்று அகர்கர் கூறினார்.






