என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஐபிஎல்: RCB அணியை தொடர்ந்து விற்பனைக்கு வரும் RR?
- ராஜஸ்தான் அணியின் 65 சதவீத பங்குகளை ராயல்ஸ் ஸ்போர்ட்ஸ் குழுமம் வைத்துள்ளது.
- ராஜஸ்தான் ராயல்ஸ் விற்பனை தொடர்பாக அந்த அணி நிர்வாகம் எந்த அதிகாரப்பூர்வமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.
மும்பை:
19-வது ஐ.பி.எல் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 15-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கிடையே நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விற்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அணியை வின்பனை செய்ய இருப்பதை அதன் உரிமையாளரான டியாஜியோ உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் பெங்களூரு அணியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ராஜஸ்தான் அணியின் 65 சதவீத பங்குகளை ராயல்ஸ் ஸ்போர்ட்ஸ் குழுமம் வைத்துள்ளது.
இது தொடர்பாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவின் சகோதரரான ஹர்ஷா கோயங்கா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு அணியை தொடர்ந்து மேலும் ஒரு அணி விற்பனைக்கு வர உள்ளதாக கேள்விப்பட்டேன். அது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆகும். எனவே விற்பனைக்கு 2 அணிகள் உள்ளன. அதை வாங்குவது புனே, அகமதாபாத், மும்பை, பெங்களூரு அல்லது அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களா? என்று தெரிவித்து உள்ளார்.
ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் விற்பனை தொடர்பாக அந்த அணி நிர்வாகம் எந்த அதிகாரப்பூர்வமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.






