என் மலர்
விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா - இன்று பலப்பரீட்சை
- இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 13 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
- 10-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்று இருக்கின்றன.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.
போட்டியின் 6-வது நாளான இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை பந்தாடியது. ஒருதலைபட்சமாக அமைந்த அந்த ஆட்டத்தில் 57 ரன்னில் அமீரகத்தை சுருட்டிய இந்திய அணி இலக்கை வெறும் 4.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து அசத்தியது. 20 ஓவர் போட்டியில் இந்திய அணியின் அதிவேக சேசிங் இதுவாகும். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், வேகப்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே 3 விக்கெட்டும் வீழ்த்தி மிரட்டினர்.
அட்டகாசமான வெற்றியுடன் போட்டியை தொடங்கி இருக்கும் இந்திய அணி அந்த உத்வேகத்தை தொடரும் முனைப்புடன் உள்ளது. இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக திகழ்கிறது. பேட்டிங்கில் 'நம்பர் ஒன்' வீரர் அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் என்று பெரிய பட்டாளமே அணிவகுத்து நிற்கிறது. ஆல்-ரவுண்டர்களாக ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல் அசத்தக்கூடியவர்கள். பந்து வீச்சில் பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி வலுசேர்க்கிறார்கள்.
சல்மான் ஆஹா தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமனை 93 ரன் வித்தியாசத்தில் புரட்டியெடுத்த கையோடு களம் இறங்குகிறது. அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் சல்மான் ஆஹா, விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸ், பஹர் ஜமான், பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, அப்ரார் அகமது, பஹீம் அஷ்ரப் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர்களாக முகமது நவாஸ், சைம் அயூப் ஜொலிக்கிறார்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல், அதைத்தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி காரணமாக இரு நாட்டு உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. அதன் பிறகு இரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இத்தகைய உணர்வுபூர்வமான சூழலில் பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மல்லுகட்டுவது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பினர் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.
இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 13 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 10-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்று இருக்கின்றன. 20 ஓவர் போட்டியை பொறுத்தமட்டில் இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20 ஓவர் உலகக் கோப்பையின் லீக் ஆட்டத்தில் நியூயார்க்கில் சந்தித்தன. அதில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதே போல் ஒரு நாள் கிரிக்கெட்டில் கடைசியாக பிப்ரவரி மாதம் துபாயில் நடந்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையின் லீக் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தெறிக்க விட்டது.
அதுமட்டுமின்றி பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக மோதிய 16 சர்வதேச போட்டிகளை (வெள்ளை நிற பந்து) எடுத்துக் கொண்டால், அதில் இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. இதில் 13-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன.
கடந்த கால வரலாறுகள் எப்படி இருந்தாலும் 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் குறிப்பிட்ட நாளில் நெருக்கடியை திறம்பட கையாளும் அணியின் கையே ஓங்கும். ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டதால் சுழலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
பாகிஸ்தான்: சகிப்சதா பர்ஹான், சைம் அயூப், முகமது ஹாரிஸ், பஹர் ஜமான், சல்மான் ஆஹா (கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், பஹீம் அஷ்ரப், ஷகீன் ஷா அப்ரிடி, சுபியான் முகீம், அப்ரார் அகமது.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் 1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.






