என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பேட் கம்மின்ஸ்
    X
    பேட் கம்மின்ஸ்

    புதிய சாதனை படைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது - கொல்கத்தா வீரர் கம்மின்ஸ்

    கடந்த ஆண்டை போலவே அணியின் முக்கிய இடத்தை பிடித்திருப்பது அதிர்ஷ்டம்தான் என கொல்கத்தா அணி வீரர் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.
    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி கொல்கத்தா அணி 3-வது வெற்றியை பெற்றது.

    புனேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்தது. இதனால் கொல்கத்தாவுக்கு 162 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    சூர்யகுமார் யாதவ் 36 பந்தில் 52 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), பொல்லார்ட் 5 பந்தில் 22 ரன்னும் (3 சிக்சர்) எடுத்தனர். கம்மின்ஸ் 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 24 பந்து எஞ்சி இருந்த நிலையில் 162 ரன் இலக்கை எடுத்தது. அந்த அணி 16 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    கம்மின்ஸ் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 15 பந்தில் 56 ரன் (அவுட் இல்லை) எடுத்தார். இதில் 4 பவுண்டரியும், 6 சிக்சர்களும் அடங்கும். வெங்கடேஷ் அய்யர் 41 பந்தில் 50 ரன் (அவுட் இல்லை) எடுத்தார். இதில் 6 பவுண்டரியும், ஒரு சிக்சரும் அடங்கும்.

    கம்மின்ஸ் 14 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் அரை சதம் எடுத்தார். இதன் மூலம் அவர் ஐ.பி.எல்.லில் குறைந்த பந்தில் அரை சதம் அடித்து முதல் இடத்தில் இருந்த லோகேஷ் ராகுல் சாதனையை சமன் செய்தார். ராகுல் 2018-ம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடியபோது டெல்லிக்கு எதிராக 14 பந்தில் அரை சதம் அடித்தார்.

    தற்போது ஐ.பி.எல். போட்டியில் குறைந்த பந்தில் அரை சதம் அடித்த சாதனை வீரர்களில் கம்மின்ஸ், ராகுல் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக யூசுப் பதான், சுனில் நரீன் 15 பந்தில் அரை சதம் அடித்து இருந்தனர்.

    ஐ.பி.எல்.லில் புதிய சாதனை படைத்தது குறித்து கம்மின்ஸ் கூறியதாவது:-

    இந்த சீசனில் நான் பங்கேற்ற முதல் ஆட்டத்திலேயே அதிரடியான விளையாடியது ஆச்சரியமானது. பாகிஸ்தானில் இருந்து இங்கு வந்தவுடன் இந்த ஆட்டம் இருந்தது. என்னால் அதிகமாக யோசிக்க கூட முடியவில்லை. உண்மையிலேயே எனது ஆட்டம் திருப்தி அளிக்கிறது.

    நான் அடித்த பந்துகள் பறந்தன. எனது ஷாட்கள் மிகவும் நேர்த்தியாக இருந்தது. புதிய சாதனை புரிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டை போலவே அணியின் முக்கிய இடத்தை பிடித்திருப்பது அதிர்ஷ்டம்தான். ஒட்டுமொத்தத்தில் மிகவும் சந்தோ‌ஷம் அடைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொல்கத்தா அணி 3-வது வெற்றியை பெற்று 6 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது.

    அந்த அணி 5-வது ஆட்டத்தில் டெல்லியை வருகிற 10-ந் தேதி சந்திக்கிறது.

    5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் தொடர்ந்து 3-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 4-வது போட்டியில் பெங்களூருவை 9-ந் தேதி எதிர் கொள்கிறது. 
    Next Story
    ×