search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ரோகித் சர்மா
    X
    ரோகித் சர்மா

    வீரர்கள் சவால் விடும் வகையில் விளையாட வேண்டும் - ரோகித் சர்மா

    22 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் தோல்வி அடைந்தது மிகப் பெரிய தோல்வி என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் தெரிவித்துள்ளது.
    அகமதாபாத்:

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    அகமதாபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் 43.5 ஓவர்களில் 176 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியாவுக்கு 177 ரன் இலக்காக இருந்தது.

    முன்னாள் கேப்டன் ஹோல்டர் அதிகபட்சமாக 57 ரன்னும், பேபியன் ஆலம் 29 ரன்னும் எடுத்தனர். யசுவேந்திர சாஹல் 4 விக்கெட்டும், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 28 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கேப்டனும், தொடக்க வீரருமான ரோகித் சர்மா 51 பந்தில் 60 ரன்னும் (10 பவுண்டரி, ஒரு சிக்சர்), சூரிய குமார் யாதவ் 36 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர்.

    இந்த ஆட்டம் இந்தியாவுக்கு 1000-வது ஒருநாள் போட்டி ஆகும். இதன் மூலம் ஆயிரமாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.

    ஆயிரமாவது போட்டியில் இந்தியா மிகப்பெரிய வெற்றியை பெற்று சாதித்தது. இந்திய அணி 1974-ம் ஆண்டு முதல் முறையாக ஒருநாள் போட்டியில் ஆடியது. 48 ஆண்டுகளில் இந்திய அணி 1000-வது போட்டியை தொட்டுள்ளது.

    ஆயிரமாவது போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நாங்கள் ஒரு அணியாக தொடர்ந்து சிறப்பாக இருக்க விரும்புகிறோம். அணி விரும்புவதை நாம் அடைய வேண்டும் என்பதே இறுதி இலக்காகும். புதுமையாக இருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டால் வீரர்கள் அதை செய்யலாம்.

    வீரர்கள் சவால் விடும் வகையில் விளையாட வேண்டும். வெவ்வேறு வி‌ஷயங்களுக்கு முயற்சிக்க வேண்டும். சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாட தயாராக இருக்க வேண்டும்.

    வீரர்களின் கூட்டு முயற்சி சிறப்பாக இருந்தது. நாங்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டோம் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆயிரமாவது போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறி உள்ளார்.

    தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் கூறும்போது, ‘22 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் தோல்வி அடைந்தது மிகப் பெரிய தோல்வி ஆகும். அதே நேரத்தில் எங்களால் 50 ஓவர்களை ஆட முடியாமல் போனதும் ஏமாற்றத்தை அளிக்கிறது. நான் உள்பட அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆட வேண்டும்’ என்றார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது ஆட்டம் இதே மைதானத்தில் நாளை மறுநாள் நடக்கிறது.

    Next Story
    ×