search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹசன் அலி கேட்சை தவறவிட்ட காட்சி
    X
    ஹசன் அலி கேட்சை தவறவிட்ட காட்சி

    ஹசன் அலி கேட்சை தவறவிட்டது திருப்புமுனை - தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் கருத்து

    மேத்யூ வாடேயின் கேட்சை ஹசன் அலி பிடித்திருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும் என தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் தெரிவித்துள்ளார்.

    துபாய்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா 2-வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.

    துபாயில் நடந்த 2-வது அரைஇறுதியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 177 ரன் இலக்காக இருந்தது.

    தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 52 பந்தில் 67 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்), பகர்ஜமான் 32 பந்தில் 55 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் பாபர் ஆசம் 34 பந்தில் 39 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். ஸ்டார்க் 2 விக்கெட்டும், கம்மின்ஸ், ஆடம் ஜம்பா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா ஒரு ஓவர் எஞ்சியிருந்த நிலையில் இலக்கை எடுத்தது. அந்த அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

    டேவிட் வார்னர் 30 பந்தில் 49 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்), மேத்யூ வாடே 17 பந்தில் 41 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்), ஸ்டோனிஸ் 31 பந்தில் 40 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். சதாப் கான் 26 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார்.

    ‌ஷகின்ஷா அப்ரிடி வீசிய 19-வது ஓவரின் 3-வது பந்தில் மேத்யூ வாடேயின் கேட்சை ஹசன் அலி தவற விட்டார். இது பாகிஸ்தானுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. அடுத்து மேத்யூ வாடே தொடர்ந்து 3 சிக்சர்கள் விளாசி ஆஸ்திரேலியாவை வெற்றிபெற வைத்தார்.

    தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் கூறும்போது, ஹசன் அலி கேட்சை தவறவிட்டது. ஆட்டத்தின் திருப்புமுனை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மேத்யூ வாடேயின் கேட்சை தவறவிட்டது ஆட்டத்தின் திருப்புமுனை. அந்த கேட்சை ஹசன் அலி பிடித்திருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும். புதிதாக வரக்கூடிய பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி ஏற்படும். ஆனால் விளையாட்டில் இப்படி நடக்கத்தான் செய்யும்.

    ஹசன் அலி எங்கள் அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவர். பாகிஸ்தானுக்காக பல போட்டிகளில் வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். நான் அவருக்கு ஆதரவாக இருப்பேன்.

    எல்லோரும் ஒவ்வொரு நாளும் சிறப்பாக செயல்பட முடியாது. ஒருவர் அபாரமான திறமையை வெளிப்படுத்துவார். இந்த நாள் அவருடைய நாளாக அமையவில்லை. நாங்கள் அவரது மனநிலையை மாற்றுவோம்.

    நாங்கள் திட்டமிட்டபடி விளையாடி ரன்களை குவித்தோம். ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக வாய்ப்பு கொடுத்தால் அவர்கள் அதை சரியாக பயன்படுத்தி கொள்வார்கள். நாங்கள் இதில் இருந்து பாடம் கற்றுள்ளோம். அடுத்த போட்டிகளில் அதை நிவர்த்தி செய்வோம். சிறிய தவறுகளால் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்துவிட்டோம்.

    இவ்வாறு பாபர் ஆசம் கூறியுள்ளார்.

    20 ஓவர் உலக கோப்பையின் இறுதி ஆட்டம் துபாயில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    நியூசிலாந்து அணி அரை இறுதியில் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×