என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகமது ஷமி
    X
    முகமது ஷமி

    லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 272 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா

    முகமது ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்களும் விளாசி கூட்டாக 89 ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து அணிக்கு 272 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா கே.எல். ராகுலின் (129) சதத்தால் 364 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து ஜோ ரூட்டின் (180 நாட்அவுட்) அபார ஆட்டத்தால் 391 ரன்கள் குவித்தது.

    27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. கே.எல். ராகுல் (5), ரோகித் சர்மா (21), விராட் கோலி (20) ஆகியோர் விரைவாக ஆட்டமிழக்க இந்தியா 55 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

    ஆனால்  4-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ரஹானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. ரஹானே 61 ரன்களும், புஜாரா 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது.

    நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷாப் பண்ட் 14 ரன்னுடனும், இஷாந்த சர்மா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ரிஷாப் பண்ட் 22 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார். இஷாந்த் சர்மா 16 ரன்னில் வெளியேறினார். ஆனால், 9-வது விக்கெட்டுக்கு முகமது ஷமியுடன் பும்ரா ஜோடி சேர்ந்தார். இருவரும் இங்கிலாந்தின் பந்து வீச்சை மிகவும் சிறப்பான எதிர்கொண்டு ரன்கள் குவித்தனர். முகமது ஷமி 57 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்து அசத்தினார். மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்திருந்தது. முகமது ஷமி 52 ரன்களுடனும், பும்ரா 30 ரன்களும் களத்தில் உள்ளனர்.

    உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் இந்தியா 298 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அப்போது 271 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 272 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. முகமது ஷமி 56 ரன்களுடனும், பும்ரா 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
    Next Story
    ×