search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிசிசிஐ
    X
    பிசிசிஐ

    இங்கிலாந்து டெஸ்ட் அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் - இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம்

    எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு நடத்திவிட வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது.

    புதுடெல்லி:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வருகிற 2-ந் தேதி இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது.

    இந்திய அணி முதலில் நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த போட்டி ஜூன் 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை சவுத்தம்டனில் நடக்கிறது.

    அதன் பிறகு இந்திய அணி இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் ஆடுகிறது. ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை இந்த டெஸ்ட் தொடர் நடைபெறும்.

    முதல் டெஸ்ட் நாட்டிங்காமிலும் (ஆக4-8), இரண்டாவது டெஸ்ட் லண்டனிலும் (ஆக.12-16), மூன்றாவது டெஸ்ட் லீட்சிலும் (ஆக 25-29), நான்காவது டெஸ்ட் லண்டனிலும் (செப் 2-6), கடைசி டெஸ்ட் மான் செஸ்டரிலும் (செப் 10-14) நடக்கிறது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டத்துக்காக டெஸ்ட் போட்டி அட்டவணையை மாற்றி அமைக்குமாறு இங்கிலாந்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளது.

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது. வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஐ.பி.எல் போட்டி பாதியில் தள்ளி வைக்கப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது.

    எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு நடத்திவிட வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்த போட்டி நடக்கிறது. இதனால் ஐ.பி.எல். ஆட்டங்களை செப்டம்பரில் நடத்திவிட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

    ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இங்கிலாந்திலும் நடத்தலாமா? என்ற யோசனை இருக்கிறது. ஏனென்றால் வீரர்கள் அனைவரும் அந்த நேரத்தில் இங்கிலாந்தில் இருப்பார்கள்.

    இதன் காரணமாகவே போட்டி அட்டவணையை மாற்றுமாறு இங்கிலாந்துக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. ஆகஸ்ட் 4-ல் தொடங்கும் டெஸ்டை முன்னதாக ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. அதாவது செப்டம்பர் 14-ந் தேதி முடிவடையும் டெஸ்ட் தொடரை செப்டம்பர் 7ந் தேதிக்குள் முடிக்குமாறு வலியுறுத்தப்பட்டு உள்ளது.

    அப்படி மாற்றினால் ஐ.பி.எல் ஆட்டத்தை நடத்துவது எளிதாக இருக்கும் என்று கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

    ஆனால் விரைவில் தனது பதிலை தெரிவிக்கும். போட்டி அட்டவணையை மாற்றினால் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை தெரிவிக்கலாம். அதே நேரத்தில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவும் அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

    Next Story
    ×