search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
    X
    சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் பட்டாளத்தை கட்டுப்படுத்தி சிஎஸ்கே ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

    முதல் போட்டியில் தோற்றபிறகு, ஆடுகளத்தை நன்றாக கணித்து 2-வது பேட்டிங் செய்தும், முதலில் பேட்டிங் செய்தும் வெற்றி பெற்றதால் மிகுந்த நம்பிக்கையுடன் சிஎஸ்கே வீரர்கள் உள்ளனர்.
    பஞ்சாப் அணிக்கெதிராக பெற்ற வெற்றியின் உத்வேகத்தை அப்படியே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராகவும் வெளிப்படுத்தியது சிஎஸ்கே.

    டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே-வுக்கு மீண்டும் ருத்துராஜ் பேட்டிங்கால் ஒரு ஏமாற்றம். இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என மொயீன் அலி 20 பந்தில் 26 ரன்களும், டு பிளிஸ்சிஸ் 17 பந்தில் 33 ரன்களும் எடுத்தனர். பவுண்டரியுடன் போட்டியை தொடங்கிய ருத்துராஜ் 10 ரன்னில் மீண்டும் ஆட்டமிழந்தது ஏமாற்றம்.

    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், கடைநிலை பேட்ஸ்மேன்கள் தங்களது பங்களிப்பை முடிந்த அளவிற்கு (ரெய்னா 18, அம்பதி ராயுடு 27, டோனி 18, சாம் கர்ரன் 13, பிராவோ 20) கொடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் கவுரமான ஸ்கோர் (188 ரன்கள்) எடுத்தது.

    மும்பை வான்கடே மைதானத்தில் 2-வது பந்து வீசுவது அவ்வளவு எளிதானதல்ல. என்றாலும் சிஎஸ்கே பவுலர்கள் நம்பிக்கையுடன் களம் இறங்கினர். கடந்த போட்டியில் முதலில் களக்கிய தீபக் சாஹர் பந்து வீச்சில் சற்று சறுக்கல். முதல் ஓவரில் 11 ரன்களும், 2-வது ஓவரில் 8 ரன்களும், 3-வது ஓவரில் 13 ரன்களும் விட்டுக்கொடுக்க சிஎஸ்கே ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சி.

    தீபக் சாஹர் சறுக்கினால் என்ன? நான் இருக்கிறேன் என சுட்டிப்பையன் சாம் கர்ரன் மனன் வோரா (14), சஞ்சு சாம்சன் ஆகியோரை அட்டகாசமாக பந்து வீசி வெளியேற்றி பிள்ளையார் சுழி போட்டார்.

    அச்சுறுத்திய பட்லர் (49), ஷிவம் டுபே ஆகியோரை ஜடேஜா ஒரே ஓவரில் சாய்க்க, ஆட்டம் சிஎஸ்கே பக்கம் 50 சதவீதம் திரும்பியது. டேவிட் மில்லர், ரியான் பராக், கிறிஸ் மோரிஸ் ஆகியோரை மொயீன் அலி அடுத்தடுத்த ஓவரில் வீழ்த்த ராஜஸ்தான் 143 ரன்னில் சரணடைந்தது.

    முதல் போட்டியில் தோற்றபிறகு, ஆடுகளத்தை நன்றாக கணித்து 2-வது பேட்டிங் செய்தும், முதலில் பேட்டிங் செய்தும் வெற்றி பெற்றதால் மிகுந்த நம்பிக்கையுடன் சிஎஸ்கே வீரர்கள் உள்ளனர்.

    ருத்துராஜ் கெய்க்வாட் மூன்று போட்டிகளிலும் சொதப்பியதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக மாற்றப்படலாம். மற்ற பேட்ஸ்மேன்கள் அரைசதம் தேவையில்லை, அணியின் ஸ்கோர் உயர்ந்தால் போதும் என ஆடுவது அணிக்கு கூடுதல் பலம். குறிப்பாக மொயீன் அலி, டு பிளிஸ்சிஸ் அதிரடியாக விளையாடுவது சிஎஸ்கே-வுக்கு யானைப்பலம். ரெய்னா, அம்பதி ராயுடு முழுப்பொறுப்பையும் எடுத்துக்கொண்டால் சிஎஸ்கே-வுக்கு பேட்டிங்கில் கவலையே இல்லை.

    பந்து வீச்சில் சாம் கர்ரன் பவர்பிளேயில் விக்கெட் கைப்பற்றியது, மிடில் ஓவர் பவுலர்களுக்கு சாதகம். தீபக் சாஹர், சாம் கர்ரன் ஆகியோரில் யாராவது ஒருவர் பவர்பிளேயில் விக்கெட் வீழ்த்தினால், அதன்பின் சிஎஸ்கே-வை எதிர்த்து ரன்கள் குவிக்க கடினமானதாகிவிடும். டெத் ஓவர்களில் பிராவோ 30 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுக்கமாட்டார் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

    ஜடேஜா

    பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் ஜடேஜா (2), மொயீன் அலி (3) ஐந்து விக்கெட்டுகளை சாய்த்திருப்பது, இனிமேல் எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம் என்ற நம்பிக்கையை தல டோனிக்கு கொடுத்துள்ளது.

    மந்தமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் இருந்து கொல்கத்தா, பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்திற்கு வந்துள்ளது. அந்த அணி ஷுப்மான் கில், நிதிஷ் ராணா, திரிவேதி, மோர்கன், தினேஷ் கார்த்திக், ஷாகிப் அல் ஹசன், அந்த்ரே ரஸல் என பேட்டிங் பட்டாளத்தை வைத்துள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் எப்படியும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

    ஏற்கனவே மூன்று போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளதால் சிஎஸ்கே பந்து வீச்சாளர்கள் இவர்களை கட்டுப்படுத்த சிறப்பாக வியூகம் வகுப்பார்கள்.

    பந்து வீச்சிலும் பேட் கம்மின்ஸ், பிரசித், அந்த்ரே ரஸல், வருண் சக்ரவர்த்தி, ஷாகிப் அல் ஹசன், ஹர்பஜன் சிங் உள்ளனர். வான்கடே மைதானத்தில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் ஒருவருடன் களம் இறங்க வாய்ப்புள்ளது. பேட் கம்மின்ஸ் தொடர்ந்து 140 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசக்கூடியவர். வருண் சக்ரவர்த்தி மாயாஜால பந்து வீச்சாளர். ஷாகிப் அல் ஹசனும் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். இவர்களை எதிர்த்து சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிப்பது சவாலாக இருக்கும்.

    சென்னை அணி வீரர்கள்

    மொத்தத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்ஸ்மேன்களை சிஎஸ்கே பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்துவதை பொறுத்து போட்டியின் வெற்றித் தோல்வி அமையும். என்றாலும் சிஎஸ்கே ஹாட்ரிக் வெற்றிக்காக எல்லா வகையிலும் போராடும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை 23 முறை மோதியுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. மற்ற போட்டிகளில் 14 முறை சிஎஸ்கேவும், 8 முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது.
    Next Story
    ×