என் மலர்
செய்திகள்

பேட்மிண்டன்
அமெரிக்கா, கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் ரத்து
தற்போதைய கொரோனா கால கட்டுப்பாடுகள் மற்றும் சிக்கல்களால் உள்ளூர் போட்டி அமைப்பாளர்களுக்கு, போட்டிகளை ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
கோலாலம்பூர்:
உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை. ஒருபுறம் தடுப்பூசி போடும் பணி நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், பல்வேறு நாடுகளில் பரவி வரும், கொரோனாவின் புதிய அலை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு, மக்கள் கூடும் நிகழ்வுகள் தடை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், கொரோனா கால கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறை சிக்கல்கள் காரணமாக, இந்த ஆண்டு நடைபெறவிருந்த அமெரிக்க ஓபன் பேட்மிண்டன், கனடா ஓபன் பேட்மிண்டன் ஆகிய இரண்டு தொடர்களையும் ரத்து செய்வதாக உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அமெரிக்க ஓபன் ஜூலை 6ம் தேதி முதல் 11ம் தேதி வரையிலும், கனடா ஓபன் ஜூன் 29 முதல் ஜூலை 4ம் தேதி வரையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டு, போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது. ஆனால், தற்போதைய கொரோனா கால கட்டுப்பாடுகள் மற்றும் சிக்கல்களால், உள்ளூர் போட்டி அமைப்பாளர்களுக்கு, போட்டிகளை ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, போட்டிகளை ரத்து செய்வது தொடர்பாக அமெரிக்கா மற்றும் கனடா பேட்மிண்டன் சங்கங்களுடன் கலந்து ஆலோசித்து உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதேபோல் ஒலிம்பிக் தகுதிப் போட்டியான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி தள்ளிவைக்கப்பட்ட தகவலையும் உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியானது, டோக்கியோ ஒலிம்பிக் தரவரிசைக்கானது. ஆனால் ஒலிம்பிக் தகுதி காலத்திற்குள் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த முடியாது என்பதால், புள்ளிகள் இனி சேர்க்கப்படாது. மாற்று போட்டிகளும் சேர்க்கப்படாது என்று உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு கூறி உள்ளது.
Next Story






