search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டார்க்
    X
    ஸ்டார்க்

    இன்று 2-வது 20 ஓவர் ஆட்டம் - ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க் திடீர் விலகல்

    இந்தியாவுக்கு எதிரான இன்றைய 2-வது 20 ஓவர் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் விலகி உள்ளார்.

    சிட்னி:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சிட்னியில் நடந்த முதல் போட்டியில் 66 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 51 ரன் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. கான்பெராவில் நடந்த 3-வது போட்டியில் இந்தியா 13 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

    மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் கான்பெராவில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி சிட்னியில் இன்று பிற்பகல் நடக்கிறது.

    இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஒருநாள் தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்க 20 ஓவர் தொடரை வெல்வது அவசியமாகும்.

    ஆஸ்திரேலிய அணி பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் ஆர்வத்தில் உள்ளது. நாளைய ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க் 20 ஓவர் போட்டிக்கான அணியில் இருந்து விலகி உள்ளார்.

    தன்னுடைய குடும்பத்தில் உள்ள சிலருக்கு உடல்நலம் சரி இல்லாமல் இருப்பதால் அவர் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    இன்று நடைபெறும் 20 ஓவர் போட்டியில் ஸ்டார்க் விளையாட மாட்டார். இது ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாகும். அவர் எப்போது அணிக்கு திரும்புவார் என்பது உறுதியாக தெரியவில்லை.

    வருகிற 17-ந் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட போட்டியிலும் ஸ்டார்க் இடம்பெறுவாரா? என்பது சந்தேகமே.

    இதுகுறித்து ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர் கூறும் போது,’உலகில் குடும்பத்தை விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை. இதற்கு ஸ்டார்க்கும விதிவிலக்கு இல்லை. அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நலக் கோளாறு இருப்பதால் ஸ்டார்க்கை இந்த நேரத்தில் விடுவிக்கிறோம் என்றார்.

    Next Story
    ×