search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ்
    X
    ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ்

    ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் வெற்றி இலக்கு

    ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 196 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.
    அபு தாபியில் நடைபெற்று வரும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் குயின்டான் டி காக் - ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை சந்தீப் வாரியார் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கினார் ரோகித் சர்மா. இதனால் மும்பை முதல் ஓவரில் 8 ரன்கள் எடுத்தது.

    2-வது ஓவரை ஷிவம் மவி வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் குயின்டான் டி காக் ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். அத்துடன் அந்த ஓவரை மெய்டனாக்கினார் ஷிவம் மவி.

    3-வது ஓவரை சந்தீப் வாரியார் வீசினார். இந்த ஓவரில் சூர்யகுமார் யாதவ் நான்கு பவுண்டரிகள் விளாசினார். சுனில் நரைன் வீசிய 6-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் இரண்டு பவுண்டரி விளாச மும்பை இந்தியன்ஸ் பவர் பிளே-யில் 1 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் அடித்தது.

    தொடர்ந்து இருவரும் சிறப்பாக விளையாட 10 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் ஒரு விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் அடித்தது. 11-வது ஓவரை சுனில் நரைன் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் சூர்யகுமார் யாதவ் 28 பந்தில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    12-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் அடித்த ரோகித் சர்மா 39 பந்தில் அரைசதம் கடந்தார். குல்தீப் யாதவ் வீசிய 14-வது ஓவரில் ரோகித் இரண்டு பவுண்டரி விளாசினார். 15-வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் சவுரப் திவாரி ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார்.

    16-வது ஓவரை சுனில் நரைன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் சவுரப் திவாரி 13 பந்தில் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார்.

    17-வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் ஹர்திக் பாண்ட்யா இரணடு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். கம்மின்ஸ் 3 ஓவரில் 49 ரன்கள் வழங்கினார்.

    ரோகித் சர்மா

    18-வது ஓவரை ஷிவம் மவி வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 54 பந்தில் 3 பவுண்டரி, 6 சிக்சருடன் 80 ரன்கள் விளாசினார். ரோகித் சர்மா ஆட்டமிழக்கும்போது மும்பை 17.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்திருந்தது.

    19-வது ஓவரை அந்த்ரே ரஸல் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ஹர்திக் பாண்ட்யா ஹிட்அவுட் மூலம் ஆட்டமிழந்தார். அவர் 13 பந்தில் 18 ரன்கள் சேர்த்தார்.

    கடைசி ஓவரை ஷிவம் மவி வீசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. பொல்லார்ட் 7 பந்தில் 13 ரன்களுடனும், குருணால் பாண்ட்யா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
    Next Story
    ×